சென்னை மூலக்கடை அருகே உள்ள பொன்னியம்மன்மேட்டில் உள்ள நவசக்தி கடம்பாடி சின்னம்மன் ஆலயத்தில் 11 ஆம் ஆண்டு சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அவருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய மோகன் பகவத் பொங்கல் பானைக்கும் சூரியனை நோக்கியும் தீபாராதனை காட்டினர். கோயிலின் உள் நடந்த கோ பூஜையிலும் கலந்து கொண்ட அவர், சிறுவர்கள், பெரியவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் முன் உரையாற்றிய அவர், "பொங்கல் திருவிழா வாழ்த்துகள் என தமிழில் வாழ்த்து சொல்லி உரையை தொடங்கினார். தொடர்ந்து இந்தியில் பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமே 3 தினங்கள் பொங்கல் கொண்டாடுகிறார்கள். சூரியனுக்காக முதல்நாள் பொங்கல் வைப்பது போற்றுதலுக்கு உரிய விஷயம்.
அதன் பின் விவசாயிகளுக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு வழிபாடு செய்கிறோம். காணும் பொங்கலின் போது நம் உறவினர்களை கண்டு மகிழ்கிறோம். அந்த தினத்தில் நமக்கு உதவி செய்பவர்களை சந்திக்க வேண்டும். அது நமக்கு முடி திருத்துபவராக இருக்கலாம், துணி துவைப்பவராக கூட இருக்கலாம்.
சர்கரை பொங்கலை போல இனிய சொற்களை நாம் பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளால் சண்டைகள் வராமல் இருக்க
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'
என்ற திருக்குறளை உணர்ந்து நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எப்படி நம் அனைவருக்கும் சூரியன் ஒளி தருகிறதோ அதே போல் நம்மை சுற்றி உள்ளவர்கள் தவறையும் பொறுத்து நன்மை புரிய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘அதிமுகவும், பாஜகவும் மூழ்கும் கப்பல்கள்’- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!