சென்னை: அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள முகை படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, கே.ராஜன், நாயகி ஹர்ஷா பைஜூ, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது, “அரசியலுக்கு அடுத்து சினிமாவில் நேரத்தை பொருட்படுத்துவதில்லை. அடுத்தவர் நேரத்தை திருடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். மலை மாதிரி இருப்பவர்கள் மண்ணாகி போவார்கள். தற்போது சினிமாவில் ஒழுக்கத்தை தாண்டி நிறைய காட்டப்படுகிறது.
டாஸ்மாக்கிற்கு படங்களில் விளம்பரம் செய்யாதீர்கள். சினிமாவில் ஜாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்த சாதியினரை தவறாக காட்டாதீர்கள் என்றவர், இயக்குனர் ராம நாராயணன் 126 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர். ஆனால் இவருக்கு இப்போதுவரை விழா எடுக்கப்படவில்லை. விரைவில் அது நடக்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர் கூறியதாவது, “ரயில் விபத்திற்கு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பது வெறும் அரசியல். இந்தியாவில் நடக்கின்ற விஷயங்களை ராகுல்காந்தி போல அமெரிக்காவில் பேசி இந்தியாவை கேவலப்படுத்தக்கூடாது. ரயில் விபத்து இதுவரை நடக்காமலா இருந்திருக்கிறது. இது மிக மோசமான விபத்து. விபத்தில் இறந்தவர்களுக்கு பணம், கை, கால், இழந்தவர்களுக்கு பணாம் என செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும் சிறப்பாக செய்துள்ளது.
அது தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ரயில். தமிழகத்தில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு சென்று பார்த்து வந்துள்ளார். உடனடியாக அதை கேலி பேசக்கூடாது. நீங்க போய் என்ன செய்ய போறீங்க என்பது சரியானது அல்ல. மளிகைக்கடை போனால் கூட இவன் என்ன ஜாதிக்காரன், இவன் என்ன கட்சிக்காரன் என பார்த்தால் நாடு உருப்படாம போய்டும்.
இந்தியாவில் முதல் முறையாக ஹாட்ரிக் பிரதமராக மோடியின் ஆட்சி தான் அமையும். தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலையின் பங்கு அதில் இருக்குமா என்பது எனக்கு தெரியாது. அதுவரைக்கும் அண்ணாமலை தமிழக பிஜேபியில் தொடர்வார என்பது எனக்கு தெரியாது, தொடரவிடுவாங்களா என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால் மோடி என்கிற பிம்பம் உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகிவிட்டது. மத்த நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம் மோடி மாதிரி ஒரு தலைவர் இருந்தால் தான் நாமெல்லாம் இணக்கமாக இருக்க முடியும் என நினைக்கும் போது இங்கு சந்து முனைகளில் இருந்து கொண்டு அவரை திட்டுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஒரு அரசு என்பது ஜெயித்த பிறகு 5 ஆண்டுகளில் எந்த விதமான அதிருப்தியும் இல்லாமல் செயல்பட்டால் மறுபடியும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் மாதாமாதம் ஒரு அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டே இருந்தால் மக்களுடைய ஓட்டு கிடைக்கவே கிடைக்காது. முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர். அவர் நான் எனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் முதலமைச்சர் அல்ல எல்லோருக்கும் முதலமைச்சர் என்கிறார்.
அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும், மத்திய அரசு கொடுத்த 10 சதவீதம் EWSஐ கொடுக்க வேண்டும். அந்த மாதிரி செய்தால் தான் ஒரு 60 லட்சம் ஓட்டு கூடுதலாக கிடைக்கும். சந்திரசேகரராவ், பிராமணர்களுக்கான முன்னேற்ற வாரியம் என ஏழை பிராமணர்களுக்கான நல வாரியம் ஒன்றை அமைத்து நிதி ஒதுக்கி, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார். என்னைக்கோ ஒரு விஷயம் நடந்ததற்காக அவர்களின் பேரப்பிள்ளைகளை தண்டிக்கிறேன் என்பது நியாயமானது கிடையாது.
தந்தை பெரியார் என்ன சொல்லி இருக்கிறார், தலைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கொடு என்கிறார். தமிழ்நாட்டில் அவர்கள் 3 சதவீதம் இருக்கிறார்கள் 8 எம்எல்ஏ இருக்கிற அளவிற்கு பார்த்துகொள்ள வேண்டும். பார்த்துக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் தனியாக கட்சி ஆரம்பிப்பார்கள். பிஜேபியில் மோடியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிற வரை நான் இருப்பேன். இல்லை என்றால் மோடி சொல்லும் படி செய்வேன்.
மோடியின் அட்வைஸ் படி தான் நான் சேர்ந்தேன் அதனால் மோடியிடம் பேசிவிட்டு தான் நான் போவேன். அண்ணாமலை எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். அவர்கள் ஆலமரைத்தையும் அரச மரத்தையும் பேச யோகிதை கிடையாது. முதலில் தான் செய்ய வேண்டிய வேலையை அவர் ஒழுங்காக செய்யட்டும். என்ன செய்துவிட்டார் என்பது தேர்தல் வந்தால் தான் தெரியும்.
உள்ளுக்குள் பிளவுபடுத்தி கட்சியில் இருப்பவர்களை வெளியில் அனுப்புகிற வேலையை செய்து கொண்டிருக்கிறார். இவர் வேறு எங்கேயோ பணத்தை வாங்கி கொண்டு பிஜேபியை ஒன்னும் இல்லாமல் செய்கிற ஸ்லீப்பர் செல்லாக அண்ணாமலை இருக்கிறார். அடுத்து பாஜக தலைவராக வானதி சீனிவாசன் வரலாம் யார் வேண்டுமானாலும் வரலாம். எப்பொழுதும் தென் தமிழகத்தில் உள்ளவர்களே தலைவர்களாக வரலாம்.
வன்னியரில் இருந்து ஒருவர் வரலாம். தேவேந்திர குல வேளாளரில் இருந்து ஒருவர் வரலாம். அதுபோல் யார் வேண்டுமானாலும் வரலாம். கல்யாண ராமன் என ஒருவர் இருக்கிறார், நல்லக்கண்ணு என ஒருவர் இருக்கிறார். அந்த மாதிரி யார் வேண்டுமானாலும் வரலாம். நான் வரனும்னு ஆசைபடவில்லை. நான் என்னைக்கும் பிஜேபி தலைவராக வரவேண்டும் என ஆசைபட்டது கிடையாது” எனத் தெரிவித்தார்.