கடந்தாண்டு ஓய்வூதியர்கள் உயிர்வாழ்வுச் சான்று சமர்ப்பிப்பதிலிருந்து அரசு அளித்த விலக்கு, கால மாற்றம் குறித்த அரசாணையை குறிப்பிட்டு, இந்தாண்டு உயிர்வாழ்வுச் சான்று சமர்ப்பிப்பதற்கான காலத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் , ”தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் வருடாந்திர சரிபார்ப்புக்காக உயிர்வாழ்வுச் சான்று அளிக்கும் காலத்தினை மாற்றம்செய்தும், கரோனா தீநுண்மி தொற்று காரணமாக கடந்தாண்டு மட்டும் சிறப்பு நிகழ்வாக உயிர்வாழ்வுச் சான்று அளிப்பதிலிருந்து விலக்களித்தும் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி இந்தாண்டு (2021) சென்னை மாநகராட்சி ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களிடம் வருடாந்திர சரிபார்ப்புக்காக உயிர்வாழ்வுச் சான்று பெறும் பணிகள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறும்.
எனவே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மார்ச் மாதத்தில் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு உயிர்வாழ்வுச் சான்று வழங்க வர வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: பந்து வீச்சிலும் அசத்தும் ரூட்; 145 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்