சென்னை: 'மிக்ஜாம்' புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் மரம் விழுந்து விபத்துகள் ஏற்படும் நிலையில் ஐந்து அடி நீளம் உள்ள முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெருங்களத்தூர் ஆலப்பாக்கத்தில் உள்ள ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த ஏரியில் இருந்து வெளியேறிய ஐந்து அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்வதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.
அந்த வீடியோவில், விளக்குகளை ஒளிரவிட்டபடி வரும் வாகனத்தைக் கண்ட முதலை சாலையைக் கடந்து ஏரிக்குச் செல்வது பதிவாகி இருந்தது. முதலை பெருங்களத்தூர் சாலையில் உலாவி வருவதாக அந்த வீடியோ வைரலாகி வருவது, அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் அருகாமையிலேயே முதலை நடமாட்டம் உள்ளதால் உடனடியாக வனத்துறையினர் அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது X சமூக வலைத்தளத்தில், “அனைவரும் இந்த வீடியோவை ட்வீட் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள நீர்நிலைகளில் சதுப்புநில முதலைகள் இருக்கின்றன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள் மற்றும் மனித தொடர்பைத் தவிர்க்கக் கூடியது.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் நீர்நிலைகள் நிரம்பியதால் இந்த முதலை வெளியே வந்திருக்கும். தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளைத் தனியாக விட்டுவிட்டு, தொந்தரவு செய்யாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!