சென்னை: வருண் குமார் 2011ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் இந்தியா காவல் பணிக்குத் தேர்வாகினார். வருண் குமார் 2010ஆம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும்போது பிரியதர்ஷினி என்ற பெண்னை காதலித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகி, இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்த நிலையில் வருண் குமாரின் பெற்றோர் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். இதுகுறித்து பிரியதர்ஷினி வருண் குமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வருண் குமார் பிரியதர்ஷினியை மிரட்டியும், அவரது மின்னஞ்சலை ஹேக் செய்து இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை வருண்குமார் அழித்தாகவும் பிரியதர்ஷினி புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் முதலில் வழக்குப் பதியவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால், வருண் குமார் மீதான புகாரில் வழக்குப் பதியப்படவில்லை எனக்கூறி பிரியதர்ஷினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வருண் குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வருண் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் காவல் அதிகாரி வருண் குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் காலம் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தரப்பில் மனுதாரர் பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் விகஸ் சிங்கை அணுகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்கவும்; காவல் அதிகாரி வருண் குமார் ஒத்துக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சமரச விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த வழக்கில் சமரச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மனுதாரர் பிரியதர்ஷினியின் சட்டப்போராட்டத்துக்காகவும், நேர விரயம் ஏற்பட்டதற்காகவும், நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதற்காகவும் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை காவல் அதிகாரி வருண் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த இழப்பீட்டுத் தொகையை மனுதாரர் ப்ரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்ததோடு, அதனை உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் நல நிதிக்கு வழங்க ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமாருக்கு நிபந்தனை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இதுகுறித்து மனுதாரர் பிரியதர்ஷினி ஈடிவி பாரத்துக்கு தொலைபேசி வாயிலாக கூறுகையில், "சுமார் 12 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நிம்மதி அடைந்துள்ளேன். மேலும் இந்த சமரசத்திற்குப் பின் எந்த ஒரு கட்டாயமும் இல்லை. இது நானே எடுத்த முடிவு. இந்த ஒரு சூழ்நிலை எந்த ஒரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. அதனால் தான் வெளிப்படையாக பேசுகிறேன்", என்றார்.
தொடர்ந்து பேசிய பிரியதர்ஷினி, ''கடந்த 12 ஆண்டுகளில் சட்ட ரீதியாகவும், ஊடக வாயிலாகவும் தனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது'' என்றார். "இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தை எட்டியபோது எனக்கு வழக்கறிஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பலர் ஆதரவு கொடுத்தனர். இதனால் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது", என்ற அவர் பெண்ணுரிமை, பெண்களுக்கு சம உரிமை எல்லாம் வெறும் காகிதத்தில் தான் உள்ளதையும் உணர முடிந்தது என்றார்.
"பெண்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும்போது, எப்பொழுது சட்ட ரீதியான போரை தொடங்க வேண்டும், எப்பொழுது நிறுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் எந்த காரணத்திற்காகவும் தங்களது சுய மரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது", என்று பிரியதர்ஷினி ஆலோசனை கூறினார்.
எதற்காக ரூ.11 லட்சம் இழப்பீட்டுத் தொகையை உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் நல வாரியத்திற்கு வழங்க முடிவு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, "இந்த வழக்கை பணத்திற்காக நான் உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்லவில்லை. நான் எதிர்கொண்ட பிரச்னை மற்ற பெண்களுக்கு ஒரு செய்தியை கொடுக்க வேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் எனக்காக வாதாடிய என்னுடைய மூத்த வழக்கறிஞர்கள் வழக்கு சம்மந்தமாக எனக்கு அறிவுரை வழங்கினர்.
இதனால் தான் சமரசத்துக்கு ஒத்துக்கொண்டேன். மேலும் இழப்பீட்டுத் தொகையை வழக்கறிஞர் நல வாரியத்திற்கு வழங்க சம்மதித்தேன்", என்ற அவர் வழக்கு நடக்கும்போது அவரது கணவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என கூறினார்.
தனது கணவர் வழக்கு சம்மந்தமாக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் ஒரு போதும் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தவில்லை எனவும் பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
"வழக்கை தொடர்ந்து நடத்தலாம் அல்லது திரும்பப்பெறுவது என்பது உன்னுடைய விருப்பம். நான் எல்லா வகையிலும் ஒத்துழைக்கிறேன்", என்று தனது கணவர் சொன்னதாக பிரியதர்ஷினி கூறினார். பிரியதர்ஷினியின் கணவரை ஈடிவி பாரத் ஊடகத்தின் சார்பில், தொடர்பு கொண்ட போது, அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. தொடர்பு கொண்டு பேசினால் அந்த பதிவு இத்துடன் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்.? - ஜி.கே.வாசன்