2005ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், 2005ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் உரிமையை அளிக்கக் கூடாதென கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்குகள் மீதான ஒருங்கிணைந்த இறுதி விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், "திருத்தப்பட்ட இந்து வாரிசு சட்டத்தின்படி மகனை போன்று மகளும் சொத்தின் சம பங்கை பெறும் உரிமை உள்ளது. சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துதாரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம பங்கு பெறும் உரிமை உள்ளது’’ என தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், "திராவிட இயக்கம் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுத்தது இல்லை. சம பங்கை அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இதயப் பூர்வமாக வரவேற்கிறேன்.
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்து முன்மாதிரியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியவர் என்பதால், இத்தீர்ப்பை திமுகவின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறேன். சமூகம் - பொருளாதாரம் - குடும்பம் என அனைத்துத் தளங்களிலும் சமஉரிமை பெற்றவர்களாகப் பெண்ணினம் தலை நிமிர்ந்து உயர இத்தீர்ப்பு சிறப்பான அடித்தளம் அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.