சென்னை: தமிழ் திரைப்படங்களான கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றியவர் விக்னேஷ்(50). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கிண்டி தொழிற்பேட்டையில் தனக்குச் சொந்தமான கட்டடத்தில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த கடைக்கு சைரன் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்புடன் வாடிக்கையாளரான ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார்.
அப்போது துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எதற்கு எனக் கேட்டதற்கு, இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால் தனக்கு பாதுகாப்பு வழங்கியதாக ராம் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் ராம் பிரபு இரிடியம் தொழிலில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 500 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் தன்னை முதலீடு செய்ய கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ராம் பிரபு இரிடியம் குறித்த கருத்தரங்கு கூட்டத்திற்கு தன்னை அழைத்துச் சென்று, அங்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், ஓய்வுபெற்ற கர்னல் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தினார் என்றும், இரிடியம் சட்டபூர்வமான தொழில் என ராம் பிரபு தன்னை நம்ப வைத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இவரை நம்பி ஒரு கோடியே 81லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை ராம் பிரபுவின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பியதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலநாள்களாக கொடுத்த பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கொடுக்காததால் ராம் பிரபுவிடம் கேட்டபோது, கன்டெய்னரில் 500 கோடி ரூபாய் பணம் வந்து கொண்டிருப்பதாகவும், வட்டியுடன் தந்து விடுவதாக கூறி கையெழுத்திட்டுக் நம்பிக்கை கொடுத்ததாக விக்னேஷ் புகாரில் தெரிவித்துள்ளார்.
பின்னர் ராம் பிரபு மீது சந்தேகமடைந்த விக்னேஷ் அவரை பற்றி விசாரித்தபோது, ராம்பிரபு மோசடி நபர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராம் பிரபுவிடம் கேட்டபோது பணம் கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை போல பல பேர் ராம்பிரபுவிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் உடனடியாக மோசடி நபர் ராம் பிரபு, ராம் பிரபுவின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை பெற்றுத் தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!