சென்னை: தமிழ்நாட்டில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்த வழக்குகளில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் மற்றும் நீதிபதி மாலா அமர்வு பிறப்பித்த 93 பக்க தீர்ப்பின் சாராம்சம்:
அறங்காவலர்கள் இல்லாத கோயில்களை நிர்வகிக்க தக்கார்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தக்கார்கள் அறங்காவலர்களின் பணியை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன விரோதம் ஏதுமில்லை. அதே சமயம் நீண்ட காலத்திற்கு தக்கார்கள் மூலமாக கோயில்களை நிர்வகிப்பதை விடுத்து, அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும்.
அர்ச்சகர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட தகுதிகளை நிர்ணயிக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ள விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமல்லாமல் கோயில் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதால், இந்த விதிகளை ரத்து செய்தால், அது மற்ற பதவிகளுக்கான நியமனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் ஆகிவிடும்.
அதேசமயம் இந்த விதிகள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு அர்ச்சகர்களை நியமிக்கும் போது பொருந்தாது. ஆகம விதிகள் பின்பற்றப்படாத கோயில்களுக்கு அரசு விதிகள் பொருந்தும். கோயில் அர்ச்சகர்களை அறங்காவலர்கள் அல்லது தக்கார்கள் மட்டுமே நியமிக்க வேண்டும். அறநிலையத்துறை அவர்களை நியமிக்க அதிகாரமில்லை.
ஆகம விதிப்படி, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண வேண்டி உள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழு நியமிக்கப்படுகிறது.
இக்குழுவில் சென்னை சமஸ்கிருத கல்லூரி தலைவர் கோபாலசாமி ஆகியோருடன் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் குழுத்தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமித்துக்கொள்ளலாம். இக்குழு தமிழ்நாட்டில் எந்தெந்த கோயில்கள், எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.