ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுடன், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி உட்பட மூன்று தொகுதிகளுக்கும், வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து, அந்த மூன்று தொகுதிகளோடு சேர்த்து, எம்எல்ஏ கனகராஜ் மறைவையடுத்து சூலூர் சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சூலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் வேட்பாளர் மோகன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர் .