சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள ஒயிட் ஹவுஸ் விடுதியில் கடந்த 7ஆம் தேதி மேற்குவங்கத்தைச்சேர்ந்த காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறைக்கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது இளம்பெண் அழுகிய நிலையிலும், உடன் இருந்த நபர் உயிரிழந்த நிலையிலும் இருந்ததைக் கண்ட போலீசார் இருவரது பிரேதத்தையும் கைப்பற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளம்பெண் அர்பிதா 3 நாட்களுக்கு முன்பே உயிரிழந்ததால் உடல் அழுகிய நிலையிலும், முகத்தில் தலையணை இருந்ததாலும், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த பிரசன்ஜித் கோஷ்( 23) மற்றும் அர்பிதா பால்(20) என்பதும்; காதலர்களான இவர்கள் கடந்த 3ஆம் தேதி கணவன், மனைவி எனக்கூறி திருவல்லிக்கேணியில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.
கடந்த 3 நாட்களாக இருவரும் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததும் அறையில் வங்காள மொழியில் எழுதி இருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அக்கடிதத்தில் 'எங்களது தற்கொலைக்கு நிதீஷ்குமார், தர்மேந்திரா, ராஜா ஆகியோர் காரணம். இதனால் இருவரும் உலகை விட்டுச்செல்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆந்திராவைச் சேர்ந்த நிதீஷ் குமார்(22), அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திரா மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா(32) ஆகியோரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த இளம்பெண் அர்பிதா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரெயின் டிரி ஹோட்டலில் தங்கி வரவேற்பாளராகப்பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதே ஹோட்டலில் வேலை பார்த்து வந்த தர்மேந்திரா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது.
இதனையடுத்து அர்பிதா பால் தியாகராய நகரில் உள்ள பிரபல ஜி.ஆர்.டி ஹோட்டலில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு நிதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அர்பிதா பால் தர்மேந்திராவை காதலித்து வருவதை அறிந்து கொண்ட நிதீஷின் நண்பர் ராஜா உடனே நிதீஷ்குமாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் அர்பிதா, நிதீஷ் மற்றும் தர்மேந்திராவுடன் பழகி வந்த விஷயம் இருவருக்கும் தெரிந்ததால் அர்பிதாவிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அர்பிதாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தைக் காண்பித்து நிதீஷ் குமார், தர்மேந்திரா, ராஜா ஆகியோர் பாலியல் உறவுக்கு இணங்குமாறு அர்பிதாவை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அர்பிதா, என்ன செய்வதென்று தெரியாமல் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த காதலரான பிரசன்ஜித் என்பவரை, கடந்த 3 ஆம் தேதி சென்னைக்கு வரவழைத்து திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
பின்னர் அர்பிதா கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் கொண்டு வந்த விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் காதலி இறந்த சோகத்தில் பிரசன்ஜித் இரண்டு நாட்களாக பிணத்துடன் இருந்துவிட்டு, பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் அஸ்ஸாமிற்கு தப்பிச்சென்ற தர்மேந்திராவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் ஐடி ஊழியர் தற்கொலை - காவல் துறை விசாரணை