சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரையில் 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல அந்தமானில் இருந்து சென்னைக்கு தினமும் 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தமானில் மாலையில் இருந்து நள்ளிரவு வரையில் தரைக்காற்று அதிகமாக வீசுவதால் விமான போக்குவரத்து நடைபெறுவதில்லை.
அந்தமானில், தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வசிப்பதால், சென்னை விமானயத்தில் தினமும் அந்தமான் செல்லும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இதனிடையே அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருன்றன. அதன் காரணமாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் அவ்வப்போது விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மாதத்தில் இரண்டு முறை தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவது பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுப்பதும் கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் அந்தமான் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிவருன்றனர்.
அந்த வகையில் இன்று(பிப். 21) முதல் வரும் 25ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை - அந்தமான் - சென்னை இடையே இயக்கப்படும் 14 விமானங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 26ஆம் தேதி சனிக்கிழமையிலிருந்து மீண்டும் அந்தமானுக்கு விமான சேவைகள் தொடங்கும் என்று விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி வரையில் 4 நாட்கள் அந்தமான் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்திருந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் 4 நாட்கள் விமான சேவைகள் ரத்தாகி உள்ளன. ஆனால் பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி விமான நிறுவனங்கள் கூறும்போது, "விமானங்கள் ரத்து பற்றி இந்திய விமான நிலையம் ஆணையம் தான் பொதுமக்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில் பயணிக்க வரும் பயணிகளுக்கு மட்டும் தான் நாங்கள் தெரியப்படுத்துவோம்" என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க:தருமபுரி தொப்பையாறு டேம் சாலை சேதம்; 2 மாதங்களாக அவதிப்படும் மக்கள்!