'இந்தத் தொழில்களில் நமக்கு ஏன் அக்கறை?' என மக்களால் பெரிதாக கண்டுகொள்ளப்படாத வேலைகளை கையில் எடுத்து தற்கால இளைஞர்கள் சாதித்து வருகின்றனர். படித்தவர், படிக்காதவர் என எந்த பாரபட்சமும் இல்லாமல் இணைய உலகம் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறது.
அப்படி கஷ்டங்கள் நிறைந்த காசு பார்க்க முடியாத வேலை என்கிற நிலையில் உள்ள மீன்பிடித் தொழிலை கையில் எடுத்ததும் அல்லாமல் அதில் மக்கள் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர், இந்த இளைஞர்கள். இவர்கள் யூ-டியூபில் பதிவிடும் மீன்பிடித் தொழில், வாழ்க்கை போன்ற வீடியோக்களை கோடிக்கணக்கான மக்கள் கண்டு ரசிக்கின்றனர்.
பட்டதாரி இளைஞன் - தூத்துக்குடி மீனவன்
தூத்துக்குடி ரேவு நகரைச் சேர்ந்த சக்திவேல் 'தூத்துக்குடி மீனவன்', என்னும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் பட்டப்படிப்பு படித்தும் வேலை கிடைக்காததால், தந்தையுடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடலுக்கு அடியில் சென்று சங்குகளை சேகரித்து வந்தவர் ஒருநாள் அந்த சாகச சங்கு வேட்டையை வீடியோ எடுத்து யூ-டியூபில் பதிவேற்றினார். அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அந்த ஆர்வத்துடன், அவர் ஒவ்வொரு மீன்பிடிக்கும் வீடியோவையும் யூ-டியூப்பில் பதிவேற்றத் தொடங்கினார். கடலில் அழிந்து வரும் பவளப்பாறைகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பேசினார். அவருடைய இந்தச் சுற்றுசூழல் உணர்வு தான், அவரது சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 12 லட்சமாக உயர்த்தியது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியும் இந்த சேனலின் தீவிர ரசிகர் ஆவார். அவர் ஒரு நாள் சக்திவேலின் வீட்டிற்குச் சென்றார். சக்திவேல் உடன் கடலுக்குள் பயணித்து அவருக்கு மிகவும் பிடித்த மீன் உணவுகளை சுவைத்தார். அதன் மூலம் சக்திவேல் மேலும் பிரபலமடைந்தார். யூ-டியூப் வருமானம் மூலம் தான் சொகுசான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்காத சக்திவேல், தம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதியாவது கிடைக்க வேண்டும் என்று கருதினார். அதனால் மின்சார வசதி இல்லாத கிராம மக்களுக்கு, சோலார் மூலம் மின் வசதி ஏற்படுத்திக்கொடுத்தார். மேலும் இளைய சமுதாயத்திற்கு கல்வி அறிவை எடுத்துச்செல்ல, தனது மீனவ கிராமத்தில் இலவச டியூஷனும் எடுக்கிறார்.
மீனவன் - மீன் வியாபாரி
அன்றாட வாழ்வாதாரத்திற்காக கடலை மட்டுமே நம்பியிருந்த சாதாரண மீனவனாக இருந்த கிங்ஸ்டன் தான் முன்னேறியது மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார். ’உங்கள் மீனவன் மூக்கையூர்’ என்னும் யூ-டியூப் சேனலை நடத்திவரும் இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் என்ற சிறிய மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர்.
டால்பின்கள், சுறாக்கள், திமிங்கலங்கள், ஆக்டோபஸ்கள், ஜெல்லிமீன்கள் போன்றவற்றின் வகைகள் குணாதிசயங்கள் குறித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமாக இருந்தார். ஆச்சரியமான பெரும்பாலும் அறிந்திராத தகவல்களை வாரி வழங்கிய இவரது காணொலிகளைக் கண்டு மக்கள் விழி விரித்து வியந்தனர். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின் இவர் யூடியூபில் காணொலி பதிவிடத் துவங்கினார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் மேலும் பல மக்களும் வங்காள விரிகுடாவில் இதுபோன்ற மீன்கள் உள்ளதா? என இவரது வீடியோக்களைப் பார்த்து அதிசயிக்கின்றனர்.
மேலும் கிங்ஸ்டன் தான் பிடிக்கும் மீனை சுவையாகவும் சுத்தமாகவும் சமைப்பது எப்படி என்றும் சொல்கிறார். அந்த காணொலிகளைப் பார்த்த மக்கள் தாங்களும் அந்த மீன்களை ருசிக்க விரும்பினர். தன் ரசிகர்களும் ருசிக்க வேண்டும் என ‘உங்கள் மீனவன்’ என்னும் பெயரில் கடல் மீன் விற்பனையகங்களைத் துவங்கினார். தற்போது இந்த உங்கள் மீனவன் கடை கிளை பரப்பி பல இடங்களிலும் பரவியுள்ளது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில் அவரது கடையை நிறுவியுள்ளார். மேலும் மீன் மசாலா போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் கிங்ஸ்டன் 200 பேருக்கு வேலை கொடுத்து வருகிறார். தற்போது ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கிங்ஸ்டன் படித்தது பத்தாம் வகுப்பு தான்!
டிக்டாக் முதல் டிவி வரை..!
’லோக்கல் பாய் நானி’ இவர் தெலுங்கு யூடியூப் ரசிகர்களுக்கு மிகப்பரீட்சயம். விசாகப்பட்டினம் ஜெட்டியின் மையத்தில் மீன்பிடிக்கும் நானி, தன் கடல் காதலி உடனான அவரின் போராட்டத்தைக் காணொலியாக பதிவிட்டு கண்களைக் கசிய விடுகிறார்.
கரை தாண்டாத ரசிகர்களையும் கடலுக்குள் சுமார் 200 மைல்களுக்கு அழைத்துச்சென்று ஒரு சாகசப் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். எதிர்பாராத புயல்கள், திடீர் மழை, படகைச் சுற்றி வரும் சுறா மீன்கள், கடந்து சென்ற சடலங்கள் என பல காணொலிகள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார், நானி.
நானி இரண்டாம் வகுப்புதான் படித்துள்ளார். ஒரு நாள் படகில் நின்று கொண்டு பிரபாஸ் படத்தில் வரும் டயலாக்கை பேச, அவர் நண்பன் அதை வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். அந்த காணொலி வைரலானதால்... அதிக வீடியோக்கள் மூலம் நல்ல ரசிகர் பட்டாளத்தை நானி பெற்றார்.
டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, அவர் யூடியூப்பில் கவனம் செலுத்தினார். இரண்டு ஆண்டுகளில் எட்டு லட்சம் சந்தாதாரர்களை அடைந்தார். தற்போது நானி பல்வேறு பிராண்டுகளின் விளம்பரதாரர் ஆகியுள்ளார். மேலும் ஈடிவியின் 'ரெச்சிபோதாம் அண்ணன்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
ஒடிசாவில் புயலால் மீனவர்களின் படகு சேதமடைந்தது, அதில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நானி எடுத்த ஒரு வீடியோவுக்காக அவரது சந்தாதாரர்கள் நான்கு நாட்களுக்குள் நான்கு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். அதுதான் அவரது ரசிகர் பட்டாளம்.
இதையும் படிங்க:ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்!