சென்னை: 'எண்ணமும் எழுத்தும் நேர்கொண்டு.. சிந்தனையும் பண்பும் சீர்கொண்டு.. பெண்ணுக்கும் மண்ணுக்கும் விடுதலை கண்டு... வறுமைக்கும் இன்பத்துக்கும் பிணைப்பு உண்டு' எனப் புரட்சி புலவன் பாடி சென்று இன்றுடன் 102 வருடங்கள் கடந்து விட்டது. பாரதி எழுதிய காகிதங்கள் பழமை பூண்டாலும் புதுமை கண்ட பூவுலகிற்கு இன்றும் அந்த முண்டாசுக் கவிஞனின் முத்திரை பதித்த கவிதைகளின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது.
எங்குக் கிடைக்கும் ஆனந்தம்..! எதில் உள்ளது நிம்மதி..! எப்படிக் கிடைக்கும் மகிழ்ச்சி..! இத்தனைக்கும் ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டார் மகாகவி சுப்பிரமணிய பாரதி. கொடும் வறுமை.. உணவுக்கு வழி இல்லை.. பசி பட்டினிக்கு இடையே எழுதினார் " எத்தனைக் கொடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று.
நீங்கள் நாள்தோறும் சந்திக்கும் மனிதர்களைப் பாருங்கள்.. சென்று வரும் இடங்கள்.. நீங்கள் வேலை செய்யும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள மனிதர்களைப் பாருங்கள். அவர்கள் முகத்தில் ஆயிரம் சோகம், வலி, வேதனை.
பெரியவன், சிறியவன் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் ஒரே போன்று சந்திக்கும் ஒன்று சோகம்தான். வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவனுக்குக் காசு பணம் இல்லையே என்ற கவலை என்றால், காசு பணம் உள்ளவனுக்குக் காரணம் சொல்ல முடியாத கவலைகள் ஆயிரம்.
மனம் இன்று ஒன்றைத் தேடும், அது கிடைத்ததும் அடுத்த நாள் மற்றொன்றைத் தேடும். இது மனித இயல்பு என்ற புரிதலை முழுமையாக உணர்ந்த மகாகவி மனிதர்களுக்குச் சொன்ன அறிவுரைதான் " எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்ற பாடல் வரி. எது கிடைத்தாலும் மனம் அமைதி கொள்ளப்போவது இல்லை.
தொலை தூரம் தெரியும் நிலவைப் பூமியில் இருந்து எட்டி தொட்டு விட முயலும் குழந்தையைப் போன்ற மனதிற்குச் சொல்லிக்கொடுங்கள் ஆனந்தம் வெளியே இல்லை..உங்களுக்குள் தான் இருக்கிறது என்று சூசகமாகச் சொல்லிவிட்டார் பாரதி.
சாதியம் குறித்தும் அதற்கு முரணான தன் பார்வை குறித்தும் "சாதிகள் இல்லையடி பாப்பா" எனக் கவி எழுதினார். ஒன்றாம் வகுப்பு முதலே பாரதியின் சீர்திருத்தக் கருத்துக்களைக் கேட்டு வளரும் சமூகம் தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று சாதி ரீதியான பாகுபாடுகளும், பிரிவினைகளும் அந்த பள்ளிகளிலேயே நடப்பதைப் பார்க்க முடிகிறது.
பாரதி மண்ணை விட்டுப் போனாலும் மனங்களை விட்டுப் போகக்கூடாது என்ற நோக்கத்திலும், அவரின் வீர் கொண்ட கவிதைகள் இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று என்ற அடிப்படையிலும்தான் மகாகவி நாள் இன்று (செப் 11) கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்த அறிஞர்களின் அறிவுரை வேறு எந்த மொழியினருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. திருவள்ளுவர் முதல் மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலரின் வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றினாலே போதும், வாழ்கையில் ஆனந்தம் நம்மைத் தேடி வரும்.
உங்களுக்குள் இருக்கும் ஆனந்தத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியை வெளியே தேடி அலைந்து திரிந்து சோர்ந்து விடாதீர்கள்.. எத்தனை கோடி இன்பம் இந்த வாழ்க்கையில் என நினைத்து நொடிக்கு நொடி மகிழ்ச்சியைத் தக்க வைத்து வாழுங்கள்.
இதையும் படிங்க: Immanuel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!