சென்னை: கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
மேலும் பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வப் பிரகாஷ், ஐயப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ், சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வப் பிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய மேல் முறையீட்டு வழக்கு இன்று (அக்.13) நீதிபதி பி.என்.பிரகாஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்