சென்னை பள்ளிகரணை பகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்தால் அவர் சாலையில் தடுமாறி விழுந்தார்.
இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை, பேனர் வைத்த ஜெயகோபலை 12 நாள்கள் கழித்து கைது செய்தது. இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, தன் மகளின் மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்காத காரணத்தாலும், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும்தான் தனது மகள் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது மகளின் உயிரிழப்பு தொடர்பாக சிறப்புப் புலானாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர தமிழ்மநாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு வேறு அமர்வில் விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் பட்டியலிட நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடைவிதிப்பது தொடர்பாக நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பேனர் வைக்க அனுமதி கோரி விண்ணபிப்பவர்கள் அனுமதி அளிக்கும் அலுவலர்கள், அச்சிடுவோர் ஆகியோரின் ஆதார் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.