சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி, நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் முக்கியச் சாலைகளில் 'பஸ்டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் 40ஏ பேருந்தின் மேற்கூரையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து பயணம் செய்தனர்.
சிறிது தூரம் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது முன்பு சென்ற இருசக்கர வாகனம் திடீரென நின்றதால், பேருந்து ஓட்டுநரும் பேருந்தை நிறுத்துவதற்காக சட்டென்று பிரேக் அடித்தார். இதில் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே கொத்துக் கொத்தாக சரிந்து விழுந்தனர். இந்தக் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.