சென்னை: தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு எழுதி மனநல பாதிப்பிற்குள்ளான மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் மனநல ஆலோசனைகளை வழங்கும் முயற்சியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் 2020-21இல் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெறும் அளவில் பயனளித்துள்ளது. 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்கு என்று பயிற்சிப் பெற்ற 20 மனநல ஆலோசகர்களும் பணியில் அமர்த்தப்பட்டு, மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் பயனாக 104 மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உதவி சேவை மையம் மூலம் 2020-21 கல்வியாண்டில் 1,10,971 மற்றும் 2021-22 கல்வியாண்டில் 1,45,988 நீட் தேர்வு மாணவர்களுக்கு மன நல ஆலோனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட 424 மாணவர்களின் மன நலம் கருதி இரண்டு மற்றும் மூன்று முறை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
அவர்கள் மனநல அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 2022-23, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை சேவைகளை வழங்கும் செயல் முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் கடந்த ஒரு மாதமாக, பொதுத் தேர்வுல் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46,932 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 46,932 மாணவர்களில் 146 (ஆண்கள்-82, பெண்கள் - 64) மாணவர்கள் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மன நலம் கருதி இரண்டு மற்றும் மூன்று முறை தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் மன அழுத்ததிலிருந்து விடுபெறுவதற்கு மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2023ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் 1.47 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அனைத்து 1.47 லட்சம் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு விவரங்கள் தேசிய தேர்வு முகமை என்ற தேர்வு மையத்திடமிருந்து பெறப்பட உள்ளது.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக பள்ளி கல்வி துறையிடம் இருந்து நீட் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 2,101 மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான மனநல ஆலோசனை, சென்னை DMS வளாகத்தில் உள்ள 104 உதவி மையத்திலிருந்து 20 மனநல ஆலோசகர்களின் மூலம் இம்மாணவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவப் படிப்பு அல்லாத மற்ற துறை உயர்க்கல்வி படிப்புகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதிக மனநல அழுத்தத்தில் (High Risk Students) உள்ள மாணவர்களை கண்டறிந்து, மாவட்ட மனநலக் குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் குழு இணைந்து மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்.
இக்குழு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 104 அரசு இலவச மருத்துவ ஆலோசனை மையம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழ்நாட்டின் பல்வேறு வல்லுநர்களின் கருத்துகளை கேட்டுப் பெற்று அந்த கருத்துகளின் அடிப்படையில் அறிக்கையினை தயார் செய்து, அந்த அறிக்கை, சட்ட முன்வடிவாக 13.9.2021 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு ஆளுநரின் ஒப்புதலை பெறும் பொருட்டு 18.9.2021 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
1.10.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர், புது டெல்லி, கோவா, சண்டிகர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான உயர்நிலைக்குழுவின் அறிக்கையின் நகல் மற்றும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைச் சட்டத்தின் நகல் அனுப்பப்பட்டது.
மாநில அரசுகள் தங்கள் மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முறையைத் தீர்மானிப்பதில் நம்முடைய அரசியலமைப்பு உரிமை மற்றும் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும் நம்முடைய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசின் முதன்மை நிலையை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அவர்களின் ஆதரவை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
14.10.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து மேற்கூறிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குதல் குறித்தும், குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெறுவது குறித்தும் விவாதித்தார். மீண்டும் 27.11.2021 அன்று முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து மேற்கூறிய மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.
1.12.2021 அன்று தமிழ்நாடு சட்டத்துறையானது, சட்ட மசோதாவின் மீது ஆளுநர் ஒப்புதலை பெற்று தருவதற்காக ஆளுநரின் செயலாளர் அவர்களுக்கு நினைவூட்டு கடிதத்தை அனுப்பியுள்ளது. பின்னர் 28.12.2021 நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்து விரிவான மனு அளித்துள்ளனர்.
பின்னர் 8.1.2022 அன்று முதலமைச்சர் நீட் தேர்வு பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதன் பின்னர் 12.1.2022 அன்று முதலமைச்சர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு மீண்டும் வலியுறுத்தி, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒரு குறிப்பாணையை வழங்கினார்.
ஆனால் 1.2.2022 அன்று ஆளுநர் சில காரணங்களை கூறி சட்டமன்றத்தின் மறுபரிசீலனை செய்வதற்கான சட்ட முன் வடிவினை திருப்பி அனுப்பினார். அதன் காரணமாக 5.2.2022 அன்று முதலமைச்சர், நீட் மீதான மேல் நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.
இதில், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, நீட் தேர்வு குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து சட்ட முன் வடிவினை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்பலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கையானது தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்குவதற்கானதொரு சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் 8.2.2022 அன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 15.3.2022 அன்று முதலமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து நீட் மசோதாவை அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். 4.5.2022 அன்று நீட் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற, ஒன்றிய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டதாக ஆளுநரின் செயலர் முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்தார்.
21.6.2022 அன்று ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு ஆளுநரின் செயலகத்திற்கு அனுப்பியது. ஆளுநரின் செயலர் , ஒன்றிய அரசின் உள் துறையிடமிருந்து பெறப்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் ஆயூஷ் அமைச்சகத்தின் கருத்துக்களை, தமிழ்நாடு அரசின் சட்டத் துறையின் செயலாளருக்கு 2.7.2022 நாளிட்ட கடிதத்தில் அனுப்பி 5.7.2022 அன்று சட்டத் துறையில் பெறப்பட்டது.
பின்னர் 11.7.2022 அன்று ஒன்றிய அரசின் அமைச்சகங்களின் ஆட்சேபணைகள் குறித்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் அட்வகேட் ஜெனரல் அவர்களது கருத்து பெறப்பட்டது. 27.7.2022 அன்று ஒன்றிய அரசு எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தமிழக அரசு தனது பதில்களை ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது.
26.8.2022 அன்று ஆளுநரின் செயலாளர், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட ஒன்றிய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் கருத்துகளை, தமிழக அரசின் சட்டத் துறை செயலாளருக்கு அனுப்பினார். 12.9.2022 அன்று தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தனது பதில்களை சட்டத்துறைக்கு அனுப்பியுள்ளது.
7.10.2022 அன்று ஒன்றிய அரசின் உயர்கல்வித் துறை, கல்வி அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசின் சட்டத்துறை உரிய பதிலை உள்துறை அமைச்சகம் மூலம் அனுப்பியது. 13.1.2023 அன்று தமிழக அரசு அளித்த பதிலுக்கு ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பியது. 17.2.2023 அன்று தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிய உச்ச நீதிமன்றத்தில் அசல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
27.2.2023 அன்று ஆயுஷ் அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு சட்டத்துறை அனுப்பியுள்ளது. பின்னர் 27.3.2023 அன்று தமிழக அரசு அளித்த பதிலுக்கு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அனுப்பியது.
இதற்கு 10.5.2023 அன்று ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கான தக்க பதிலினை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு சட்டத்துறை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி, தொடர்ச்சியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது . நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
எனவே நீட் விலக்குக்கு அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. சல்லிக்கட்டு போன்று நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என தமிழக அரசு நம்புகிறது. நீட் விலக்கு நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த வாரம் வரை நீட் தேர்வு விலக்குக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை நிச்சயம் தேர்வு உண்டு. நீட் தேர்வுக்கு மாணவர்கள் நிச்சயம் தயாராக வேண்டும்.
நீட் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு நடைபெறும் கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போது கெடுபிடிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். நீட் தேர்வு விலக்கு பெற்று தருவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுதான். அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு இயற்றப்பட்ட சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டது அதனையும் அவர்கள் வெளியே தெரிவிக்கவில்லை. இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை வழக்கம் போல் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனக்குத்தானே 'ஜல்லிக்கட்டு நாயகன்' பட்டம் சூட்டிய ஓபிஎஸ்! - ஜெயக்குமார் சாடல்