இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் துவங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் சுற்று மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்விற்கு உரியக் கட்டணத்தைக் கடந்த மூன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில் சேர விரும்புகின்றனர் என்ற விபரத்தை ஆன்லைனில் ஜூலை எட்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பதிவு செய்யலாம்.
முதல் கட்ட கலந்தாய்வில் மட்டும் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்காகக் கூடுதலாக இரண்டு நாட்கள் பணம் செலுத்தவும், விரும்பிய கல்லூரியைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் முதல் மூன்று நாட்கள் பணம் செலுத்தவும், அடுத்த இரண்டு நாட்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் வரிசைப்படி ஆன்லைனில் பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படும். அப்போதும் மாணவர்கள் தங்களுக்கு உரிய ஒதுக்கீட்டினை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தற்பொழுது ஒதுக்கீடு செய்துள்ள கல்லூரி மற்றும் பாடத்திட்டத்தில் தவிர்த்து வேறு பாடத்திட்டமும் கல்லூரியைக் கிடைத்தால் அளிக்க வேண்டும் என்பதற்கான அபலோட் என்பதைத் தேர்வு செய்யலாம்.
இந்த கலந்தாய்விற்கு எந்த சுற்றி எத்தனை மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தினை tneaonline.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.