சென்னை: முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடப்பாண்டு காலதாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்தவர்கள் பட்டியல் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்கள் நாளைக்குள் (மார்ச் 8) கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள பட்டியலில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் தமிழ்நாட்டிலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 27 இடங்களை முதுகலை மருத்துவப் படிப்பில் தேர்வு செய்துள்ளனர். இதனால் 27 இடங்கள் தேவையின்றி பறி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் கலந்தாய்வு
இதுகுறித்து சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறும்போது, "அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்திய இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். எனவே, மீண்டும் புதிதாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்து இரண்டாம் கட்ட கலந்தாய்வை, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்த வேண்டும்" என தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் தலைவர் கீர்த்திவாசன் கூறும்போது, "அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளக் கூடாது என்பது விதியாகும். நடப்பாண்டு வரை அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகும் இடங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு இடங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்படாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு இடம் கிடைக்காது என மாணவர்கள் அச்சத்தில் தவறுதலாக இடங்களைத் தேர்வு செய்திருக்கலாம். இதை முறைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கலந்தாய்வில் 27 இடங்களை மீண்டும் சேர்த்து புதிதாக தரவரிசை பட்டியல் வெளியிட்டு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்த ஜெயலலிதா - பரபரப்பு வாக்குமூலம் அளித்த மருத்துவர்