சென்னை: உக்ரைனில் போர் நடப்பதால் கடந்த சில தினங்களாக இந்தியா அரசு சிறப்பு விமானங்கள் இயக்கி இந்தியர்களை டெல்லி, மும்பை நகரங்களுக்கு அழைத்து வந்தன. இதை போல, தமிழ்நாட்டிற்கு 11வது நாளாக விமானங்களில் சென்னை, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த 4 மாணவ- மாணவிகள் டெல்லியில் இருந்து நேற்று (மார்ச்.10) நள்ளிரவு சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்தவர்களைத் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த விமானங்களில் போர் நடக்கும் பகுதியான கார்கிவ் நகரில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர். மாணவர்களைக் கண்டதும் குடும்பத்தினர் கட்டிப் பிடித்து கண்ணீர் மல்க வரவேற்றனர். அதன் பின்னர் சொந்த ஊருக்கு அரசு செலவில் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த மாணவி உஷாவின் தந்தை ஐசக் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகள் டாக்டர் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து அனுப்பினேன். 6ம் ஆண்டு படிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படிப்பை முடிக்க வேண்டும். டாக்டராக வந்ததும் கடன்களை அடைக்கலாம் என்ற நினைத்தேன்.
உக்ரைன் போரால் உடைமைகளை எடுக்க முடியாமல் உடுத்தின துணியுடன் வந்து உள்ளார். வாழ்க்கை எதிர்காலத்திற்கு என்ன செய்ய முடியும் என தெரிய வில்லை. எங்க வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்த முதலமைச்சர். உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் படிப்பைத் தொடர வாழ்க்கையை அமைத்துத் தர உதவிட வேண்டும் என்றார்.
முகமது மன்சூர் கூறுகையில், "உக்ரைனிற்கு கடந்த 4 மாதத்திற்கு முன் சென்றேன். நீட் தேர்வுக்கு லட்சணக்கான பேர் எழுதினாலும் குறைந்த அளவில் கிடைக்கிறது. போர் தொடங்கியதால் பல்கலைக்கழகத்தில் சான்றுகள் சிக்கிவிட்டன. இதனால் என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதே கேள்விக்குறி? உக்ரைனிற்குத் திரும்பிச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ்நாட்டில் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மாணவி உஷா கூறுகையில், "தமிழ்நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வந்த மத்திய அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2 மாதத்தில் படிப்பு முடிய இருந்ததால் காத்திருந்தோம். ஆனால் போர் முடியாததால் நாட்டிற்கு வந்து விட்டோம். உக்ரைனில் உள்ள எங்கள் சான்றிதழ்களை மீட்டுப் படிப்பைத் தொடர் வழிவகை செய்ய வேண்டும். வேறு நாட்டிற்குச் சென்று படிப்பைத் தொடர வசதி இல்லை" என்றார்.