தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவின் காரணமாக 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கு ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.
கிட்டத்தட்ட 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் 57.8 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, நடைபாதை, புல்வெளி உள்ளிட்டவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நினைவிடம் திறக்கப்படும் அதே நாளில், சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட இருக்கிறது. இதற்கு மாணவ, மாணவியர் கட்டாயம் வரவேண்டும். இந்த நிகழ்வையொட்டி மாணவ, மாணவியருக்கு வருகைப்பதிவேடு கட்டாயம் எடுக்கப்படும் என்றும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கல்லூரி மாணக்கர்களை அதிமுக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தும் இந்தச் செயலுக்கு கல்வியாளர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மாணவர்கள் மீது வழக்குப்பதிவு: எச்சரிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்!