இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள அரசு, சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று (நவம்பர் 3) முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நேரடியாக நடத்தப்படும். கலந்தாய்வு நடத்தப்படும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும்.
தமிழ்நாட்டி உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 5,550 இடங்கள் உள்ளன. அவற்றில் மாநில ஒதுக்கீட்டில் 4,043 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 20 பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1940 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இவற்றில் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ் படிப்பில் 304 மாணவர்களும், பி.டி.எஸ் படிப்பில் 91 மாணவர்களும் 395 மாணவர்கள் இடம் கிடைக்கும்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தாங்கள் அரசுப்பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை தகவல் கையேட்டில் உள்ளது போல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அவர்கள் அடுத்த ஆண்டிற்கான சான்றிதழை பெற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் ஆள்மாறாட்ட தடுப்பதற்காக தேசிய தேர்வு முகாமிலிருந்து மாணவர்களின் கைரேகை கண்விழி ரேகை புகைப்படம் போன்றவைகள் பெறப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது, கல்லூரியில் அவர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்ப்போம். எதனால் ஆள்மாறாட்டம் போன்றவை நடைபெறுவதை கண்டறிய முடியும் என தெரிவித்தார்.