சென்னை : ஆவடியில் இருந்து கோயம்பேடுக்கு மாநகர பேருந்து (தடம் எண்.70A) காலையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாலகிருஷ்ணன் (42) என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐயில் படிக்கும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துகொண்டு வந்தனர்.
அப்போது ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இருவரும் மாணவர்களிடம் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்து வந்துள்ளதால் அவர்கள் மாணவர்களை கண்டித்துள்ளனர். இதையடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை ஐடிஐ பேருந்து நிறுத்தத்தில் அம்மாணவர்கள் இறங்கி உள்ளனர்.
பின்னர், அங்கிருந்து பஸ் புறப்பட்டது. அப்போது, மாணவர்கள் அரசின் பின்பக்க கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஓட்டுநர், பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாணவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : சென்னையில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் சாலை விபத்துகள்