சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் 14 வயது மகன், அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். கரோனா காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனது நண்பர்களுடன் வீட்டின் முன்பு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர் சிறுவனை அழைத்து, வண்ன மீன்கள் வாங்க வேண்டும் எனக்கூறி மீன் கடையின் முகவரி கேட்டதாகக் கூறப்படுகிறது. வண்ண மீன்கள் என்றவுடன் குஷியான சிறுவன் அவர்களிடம் சென்று முகவரி கூறும்போது, ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
வீட்டினுள் வைத்து சிறுவனிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். தொடர்ந்து சிறுவனின் தந்தையை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் தொலைபேசி எண்ணையும் கேட்டுள்ளனர். தந்தையின் தொலைபேசி எண் தெரியாது எனக்கூறவே, சிறுவனை அங்கேயே வைத்து பூட்டி விட்டுச் வெளியே சென்றுள்ளனர்.
பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் யாரும் வராததைப் பயன்படுத்திக்கொண்ட சிறுவன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்று, இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் 'லிப்ட்' கேட்டு வீட்டுக்குச் சென்றார்.
பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் சிறுவன் கூறுவதை நம்ப மறுத்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை பார்வையிட முயன்றனர்.
ஆனால் சிசிடிவி சரிவர செயல்படாததால், சிறுவன் தெரிவித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை, கச்சினாகுப்பம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியிலுள்ள வீட்டிற்குச் சென்றனர். அந்த வீட்டில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுவனை கடத்தியது அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (29), அஜித் குமார் (24) என்பது தெரியவந்தது. சிறுவனின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததும், பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பணத்திற்காக கடத்தல், சிறை வைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லோகேஷ்வரன் மீது ஏற்கனவே ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சிறுவனை கடத்திய வழக்கு ஒன்றும், கோயம்புத்தூரில் கொலை வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.