சென்னை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால சோழன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டர். இதில், ஆளுநரின் பாதுகாப்பு கருதி பட்டம் பெற வந்த மாணவன் அரவிந்தசாமியை காவல்துறையினர் தனியாக அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது மாணவன் அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அறையில் பூட்டி வைத்து அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருவிடைமருதூர் அடுத்த இடையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தசாமி. பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர், அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021ஆம் ஆண்டு எம்ஏ., எம்.பில் (MA M.Phil) முடித்து விட்டு, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் (Mass Communication) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் மாணவர் அரவிந்தசாமி இந்திய மாணவர் சங்கம்(SFI) மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரி விடுதி சரியில்லை, உரிமை தொகை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காலை 8 மணிக்கு பட்டமளிப்பு விழாவிற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும் அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக அரவிந்தசாமி பட்டம் பெற சக மாணவர்களுடன் அரங்கத்தில் அமர்ந்திருந்தார். ஆனால், அரவிந்தசாமி ஆளுநருக்கு எதிராக கருப்பு மாஸ்க் மற்றும் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்று தனி அறையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரது உள்ளாடைகளை களைத்து காவல் துறையினர் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நம்மிடையே பேசிய மாணவர் அரவிந்தசாமி, "நான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டு எம்ஏ., எம்.பில் (MA M.Phil) முடித்தேன். அதற்கான பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காலையில் 9 மணிக்கு பல்கலைக்கழகத்திற்குள் நான் சென்றேன். பட்டமளிப்பு விழாவிற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு, பட்டமளிப்பு வளாகத்தில் அமர்ந்திருந்தேன். சரியாக 9:25 மணிக்கு தஞ்சை எஸ்.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் ஒரு காவலர், நான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தனர்.
"ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஏதாவது இருக்கா?, கருப்பு பவுடர் அல்லது கருப்பு கொடி இருக்கா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினேன். பின்னர் எஸ்.பி.சி.ஐ.டி போலீசார் அங்கிருந்து சென்றார். அடுத்த 5வது நிமிடம், கியூ பிரிவு போலீசார் என்னிடம் வந்து, என்னுடைய தலைமுடிக்குள் ஏதாவது இருக்கிறதா? என கையை நுழைத்து பார்த்தார்கள். இரண்டு முறை இந்த சோதனையை பொது வெளியில் நடத்தியதால் அங்கே அமர்ந்திருந்த 1000 பேரும் என்னையே பார்த்தனர். அதுவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அடுத்ததாக டி.ஐ.ஜியின் சிறப்பு பிரிவு காவலர்கள் என்னை வெளியில் அழைத்தனர். நான் வெளியே வந்தவுடன் பட்டமளிப்பு விழா வளாகத்தை மூடிவிட்டு, என்னை பட்டமளிப்பு விழா நடந்த வளாகத்திற்கு மின்சாரம் வழங்கும் அறையில் வைத்து அடைத்துவிட்டனர். என்ன என்று கேட்டபோது, ‘ஆளுநருக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு இருக்கிறீர்கள், இங்கே நீங்கள் ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக மேலிடத்தில் உங்களை சோதனை செய்ய உத்தரவு’ என கூறிவிட்டு என்னை சோதனை செய்ய தொடங்கினர்.
ஆடைகளை அனைத்தையும் களையும் படி கூறினார்கள். அன்று நான் உள்ளாடை கருப்பு நிறத்தில் அணிந்து இருந்தேன். இதை வைத்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டியா? என கேள்வி கேட்டனர். நான் பட்டம் வாங்க வந்திருக்கேனா? அல்லது சட்டையை கழற்றி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருக்கேனா? என்று கேள்வி எழுப்பினேன்.
அரசியல் ரீதியாக வெளியில் பல கருத்துகளை கூயிருப்பேன். ஆனால், இங்கு பல்கலைகழகத்திற்கு பட்டம் பெறும் மாணவனாக மட்டும் வந்திருக்கிறேன் என கூறியவுடன் அங்கிருந்து சென்றனர். நான்தான் முதல் பட்டதாரி மாணவன் என்றும் கூறி பார்த்தேன். பட்டம் பெறுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. மதியம் 12 மணிக்கு பட்டமளிப்பு விழா நிறைவு பெற்றது. இதனையடுத்து, அங்குள்ள காவல்துறையினரிடம் என்னை ஒப்படைத்தனர். அவர்கள் என்னை வாகனத்தில் அழைத்து செல்லும் போதுதான் அனைவருக்கும் இப்படியொரு நிகழ்வு நடந்தது என்று தெரிந்தது.
இதன் தொடர்ச்சியாக, தகவல் அறிந்து வந்த சி.பி.எம் கட்சியினர் அங்கு கூடியதால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்னை பல்கலைக்கழகத்தில் இறக்கி விட்டனர். பல்கலைக்கழகத்தில் என்னுடைய பட்டத்தை கேட்ட போது காணவில்லை என்று கூறினார்கள். பின்னர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறையில் இருக்கும் என கூறினார்கள். அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள உதவியாளரிடம் எனது பட்டம் இருந்தது. விழாவிற்கு வராதவர்களின் பட்டம் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறி என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அலுவலக உதவியாளர் எனது பட்டத்தை வழங்கினார்.
அலுவலக உதவியாளர் கையினால் பட்டம் வாங்கியதை நான் பெருமையாக கருதுகிறேன். பின்னர் அந்த பட்டத்தை எடுத்து வந்து காவல்துறையினரிடம் காண்பித்தேன். இது தான் அங்கே நடந்தது. இது போன்று இனி எந்த ஒரு மாணவனுக்கும் நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.
உங்களை மட்டும் குறிப்பாக சோதனை செய்வதற்கான காரணம் என்ன? என்று கேட்ட போது, “நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என போராட்டம் மற்றும் சமூகவலையதளங்களில் கடுமையாக கண்டனங்களை தெரிவித்தோம். அதே போன்று தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்கலாம் என்ற ஆளுநரின் கருத்துக்கு கடுமையாக குரல் கொடுத்தேன். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சரே ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியிலான விமர்சனங்களை வைத்திருக்கிறார். அமைச்சருக்கு ஒரு நீதி? மாணவனுக்கு ஒரு நீதியா?” என கேள்வி எழுப்பினார்.
கருப்பு ஆடை அணிந்திருந்ததால்தான் மாணவரை சோதனை செய்தோம் என்று காவல்துறையின் விளகத்திற்கு பதிலளித்த அரவிந்தசாமி, “நான் கருப்பு நிற ஆடை அணியவில்லை, நான் அன்றைய தினம் ஊதா (கத்திரி) நிற மேல்சட்டையும், வெள்ளை நிற கால் சட்டையும் அணிந்திருந்தேன். உள்ளாடை (ஐட்டி, பனியன்) மட்டுமே கருப்பு நிறத்தில் அணிந்திருந்தேன்” என கூறினார்.
தபால் மூலமாக மாணவர் பட்டம் வாங்க விண்ணப்பம் செய்திருந்தார் என பல்கலைக்கழக விளக்கத்திற்கு பதிலளித்த அரவிந்தசாமி, “பட்டம் வாங்குவது என்பது ஒரு கனவு. அதை தபால் மூலம் வாங்குவதற்கு யாரும் விருப்பப்பட மாட்டார்கள். நான் நேடியாக பட்டம் வாங்குவதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தினேன். அதற்கான ரசீது என்னிடம் உள்ளது” என கூறினார்.
ஆளுநர் கையால் தான் பட்டம் வாங்குவேன் என மாணவர் கூறியதாக பல்கலைக்கழக அளித்த் விளக்கத்திற்கு பதிலளித்த அரவிந்தசாமி, “பி.ஹெச்.டி மாணவர்களுக்கு ஆளுநர் பட்டம் கொடுப்பார். எம்.பில் மாணவர்களுக்கு துணை வேந்தர் பட்டம் கொடுப்பார். எம்.ஏ மாணவர்களுக்கு பதிவாளர் கொடுப்பார். நான் ஆளுநர் கையால் வாங்குவேன் என எந்த இடத்திலும் கூறவில்லை. அவர் கையால் எனக்கு வேண்டவும் வேண்டாம். சாதிய ரீதியிலாக என்னை அவர்கள் அணுகவில்லை. ஆளுநருக்கு எதிராக செயல்பட்டதால் தான் இப்படி செய்தார்கள்” என கூறினார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “என்னை அவமதித்து அராஜக போக்கை கையாண்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க சட்டப்போராட்டம் மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாடு அரசுக்கு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மனுவாக அளித்துள்ளோம். இது போன்று இன்னொரு மாணவன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஆளுநர் என்றாலே மாணவர்கள் பயப்படுகின்றனர். ஆளுநர் வந்தால் காவல்துறையினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?” என முடித்தார்.