சென்னை: இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. கரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகளை, கடந்த 17ஆம் தேதி தேசியத் தேர்வு முகமை அறிவித்தது.
நாடு முழுவதிலுமிருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதிய இத்தேர்வின் முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில், தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிக நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தேசியத் தேர்வு முகமை அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, மாணவர்கள் பயன்படுத்திய ஓ.எம்.ஆர் தாளும் மாறியுள்ளதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, திருத்தப்பட்ட முடிவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் ஒருவர் நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றிருப்பது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நீட் தேர்வு முடிவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.