சென்னை: சென்னையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோ-ஜாக் ) மாநில பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சேகர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எமிஸ் திட்டம் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. எமிஸ் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் போது ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக திருச்சியில் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியர் வகுப்பறையில் மாரடைப்பால் இறந்துள்ளார். ஆசிரியர் தினத்தில் எமிஸ் தளத்தில் ஆசிரியர் மாணவர் வருகை பதிவை பதிவு செய்தால் போதும் என்று அமைச்சர் சொன்னது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதேபோல் எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் தேர்வு இருப்பதால் எழுத்துப்பூர்வமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை. பிஎட் படிக்கும் மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம் அதை செய்யவில்லை.
இந்த திட்டம் மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உருவம் வரைய வேண்டும் என கூறுகின்றனர். பாடம் நடத்த முடியாத நிலையில், மாணவர்களுக்கு 40 கேள்விகள் கேட்கின்றனர். அதற்கு மாணவர்கள் பதில் கூற முடியாத நிலை உள்ளது.
காலை சிற்றுண்டித் திட்டத்தில் 2 ஆசிரியர்கள் இருந்தாலும், தினமும் ஒரு ஆசிரியர் காலை 7 மணிக்கு செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை வழங்குகின்றனர். 8ஆம் வகுப்பு வரையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
எனவே 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும். மேலும் மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்கள் வழங்குவது போல், காலை சிற்றுண்டி திட்டத்தையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல் கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி தலைமை ஆசிரியரை மேயர் தரக்குறைவாகவும், கொச்சைப் படுத்தியும் பேசி அவமானப்படுத்தி உள்ளார். அந்த விவகாரம் வேதனைப்படுத்துகிறது. அவர்களின் உள்நாட்டு அரசியலை பள்ளியில் காண்பித்துள்ளனர்.
தலைமை ஆசிரியை ஒரு பெண் என்றும் பார்க்காமல் பெண்ணுக்கு உரிய வரன்முறையை மீறி பேசிய மேயரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டிட்டோ ஜாக் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலையில் மேயரின் செயலை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் தெரிவிப்போம்.
எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து உரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யாமல், பி.எட் படிக்கும் மாணவர்களை வைத்து ஆய்வு செய்து எங்களை அவமானப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. சிபிஎஸ் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்!