சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்குள்பட்ட திருவொற்றியூர் பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணபிரான் என்பவர், மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்று பாதி வழியிலேயே நிறுத்தி பயணிகளை வேறு பேருந்தில் பயணிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் போக்குவரத்து கழகத்தின் பெயரை கெடுத்ததாகவும் கூறி கண்ணபிரனை பணிநீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கண்ணபிரான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம், கண்ணபிரானை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. பின் தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போக்குவரத்துக் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், பணியில் இருக்கும்போது ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மது அருந்தியிருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, போக்குவரத்துக் கழகம் தாக்கல் செய்த அறிக்கையில், பணிக்கு வரும்போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் மது அருந்தி இருக்கிறார்களா என்பதை கருவி மூலம் சோதனை செய்த பிறகே பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர்கள் போதையில் வாகனத்தை இயக்குகிறார்களா என்று அறிய பேருந்துகளில் திடீர் சோதனைகளும் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதைத் தடுக்கும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆயிரம் ஆயில் பந்துகள்...! - ஆவடி மாநகராட்சி