கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 முதல் 30வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனோ பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான ஆய்வு கூட்டம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நகர் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.
உணவு துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் , சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், கரோனா காலத்தில் தற்போதைய சூழல் அசாதாரணமாக உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மைக்ரோ லெவல் அளவில் பணிகள் வீடுவீடாக மேற்கொள்ளப்படுகிறது.
300 வீடுகளுக்கு ஒரு அலுவலர் என முழுமையாக கண்காணிக்கப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் 10,423 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5015 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
சென்னையில் இறப்பு விழுக்காடு 1.4ஆக உள்ள நிலையில் இறப்பு விகிதத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை சென்னை மாநகர மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என முறையான வழிகாட்டுதல் இருக்கிறது. அதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைப்பிடித்து நோய் பாதிப்பை குறைக்க ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் தகுந்த இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஊரடங்கு அமலாவதற்கு போதிய நேரம் உள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க பதற்றமடைய வேண்டாம். இந்த ஊரடங்கில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.