சென்னை: கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், போராட்டம் மேற்கொள்ளும் கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து தொழிலில் ஈடுபடுமாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திருபுவனம், கும்பகோணம், சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் உள்ளனர்.
பொதுவாக ஜவுளித்தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக ஏற்றுமதியில் தொய்வு மற்றும் உள்ளூர் சந்தையில் கொள்முதல் குறைவு காரணமாக, குறிப்பாக பட்டு உற்பத்தி விற்பனை வணிகம் பெரும்பாலும் சந்தையில் குறைந்து காணப்படுகிறது. பட்டு ரக வாடிக்கையாளர்களிடையே விலை குறைவான ரகங்களையே வாங்கும் நிலை அதிகம் உருவானதாலும் மற்றும் அதிக விலை மதிப்புள்ள சேலைகளை வாங்கும் நிலை தற்காலிகமாக குறைந்துள்ளது.
அதன் காரணமாக தனியார் பட்டு கைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்தும் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பட்டு ரக இருப்பினை சந்தை தேவைக்கேற்ப கணிசமாக குறைத்தும் வருகின்றனர். எனினும், பட்டு கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க கூட்டுறவு அமைப்பின் கீழ் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினையும் அதற்கு ஊதியமும் வழங்கப்பட்டு, அவர்களது தயாரிப்புகள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் மின்னணு கணினிகளின் எதிர்காலம் - சென்னை ஐ.ஐ.டியில் 6ஆம் தேதி கருத்தரங்கு!
கைத்தறி துறை, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி அமலாக்க அலுவலகம் மூலம் பட்டு மற்றும் பருத்தி உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களில் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும். பட்டு மற்றும் பருத்தி ஒதுக்கீடு ரகங்களை சட்டத்திற்கு புறம்பாக விசைத்தறியில் உற்பத்தி செய்வதை கண்காணித்து தடுத்து வருகிறது.
மேலும், கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு ஜவுளி நிறுவனங்களிலும், தனியார் கடைகளிலும் விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்கவும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 1500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள், பறக்கும் படையினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்கள், விசைத்தறியில் உற்பத்தி செய்வதைக் கண்டறிந்து 16 விசைத்தறி உரிமையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பட்டு ரகம் விற்பனை செய்யும் பிரசித்திப் பெற்ற கடைகளிலும் இதுபோன்ற திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, காஞ்சிபுரம், ஆரணி, திருவண்ணாமலை, திருபுவனம், கும்பகோணம், சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
உற்பத்தி தேக்க நிலை தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், தற்காலிக தேக்க நிலை சீரடைந்து உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாலும், கைத்தறி உற்பத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதைத் தடுக்க அரசு சட்டப்படி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், கைத்தறி நெசவாளர்களை போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து தொழிலில் ஈடுபட வேண்டும்.
மேலும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தினை மீறுபவர்கள் மீது கைத்தறி நெசவாளர்கள், பொதுமக்கள் கைத்தறி ஆணையரக கட்டுப்பாட்டு அறையின் 9176627637, 9176617637 ஆகிய வாட்ஸ்அப் எண்களுக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டர்கள் - ஷாக்கிங் ரிப்போர்ட்!