‘ஒரு காலத்துல அவங்கெல்லாம்’ என்ற கதையாய் தமிழ்நாட்டில் காங்கிரஸின் நிலைமை இருக்கிறது. இந்தியாவின் முகமாக காங்கிரஸ் இருந்தது போல் ஏறத்தாழ தமிழ்நாட்டின் முகமாகவும் அது ஒரு காலத்தில் இருந்தது. இன்று உதயசூரியனும், இரட்டை இலையும் எப்படி தவிர்க்க முடியாத சின்னமாக இருக்கின்றனவோ அதேபோல் கையும் இருந்தது.
தமிழ்நாட்டை முதல் முதலாக ஆட்சி செய்த தேசிய கட்சியும் கடைசியாக ஆட்சி செய்த தேசிய கட்சியும் அதுதான். 1952ஆம் ஆண்டு நடந்த மெட்ராஸ் மாகாண தேர்தலில் களமிறங்கி வென்று அரியணையில் ஏறியது. அதன் பிறகு காங்கிரஸின் ஆட்சியில் இந்தி திணிப்பு என்ற விவகாரம் க தலை தூக்கியது. தமிழ்நாடு இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள், உயிர் துறந்தார்கள், பெரியார், அண்ணா, கருணாநிதி என திராவிட சித்தாந்தவாதிகள் அனைவரும் வீதி வீதியாக முழங்கினார்கள்.
மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தது. 1962ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 206 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 139 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தது. ஆனாலும், 27 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் திமுகவின் வாக்கு வங்கி காங்கிரஸ் கைக்கு கொஞ்சம் வலியை கொடுத்தது.எதிர்க்கட்சியாக கோட்டைக்குள் நுழைந்த திமுக காங்கிரஸுக்கு பெரும் குடைச்சலையும் அளித்தது.
அதன் பிறகு நடந்த தேர்தலில்தான் தமிழ்நாட்டின் முகம் மாற ஆரம்பித்தது. 1967ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல் முதலாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. அடுத்த தேர்தலிலோ நிலைமை முற்றிலும் விபரீதமானது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவருடனோ இல்லை கருணாநிதியுடனோ கை கோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மிக முக்கியமாக, அதிமுக உதயத்துக்கு காரணமே இந்திரா காந்திதான் என்ற தகவலும் இப்போதுவரை உண்டு.
அதேபோல், திமுகவுடன் கூட்டணி வைக்கும் நிலையும் உருவானது. 1980ஆம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 110 சீட்டுகள் திமுக சார்பில் வழங்கப்பட்டன. இரண்டு கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்த காங்கிரஸ் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. இந்தச் சூழலில் 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைக்க கட்சி தலைமை விரும்ப மூப்பனாரோ அதற்கு எதிர் நிலையில் நின்றார்.
அதுமட்டுமின்றி காங்கிரஸிலிருந்து தனது ஆதரவாளர்களை கூட்டிக்கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி வைத்து அக்கூட்டணி வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.
இதையடுத்து நடந்த 2001ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் ( 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி உதயமானது) 2006ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து திமுகவுடன் அங்கம் வகிக்கிறது. 1980 தேர்தலில் திமுக கூட்டணியில் 110 சீட்டுகளை பெற்ற காங்கிரஸ் 2006ஆம் ஆண்டு தேர்தலில் 48 சீட்களையும், 2011ஆம் ஆண்டு தேர்தலில் 60க்கும் மேற்பட்ட சீட்களையும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் 41 சீட்களையும் வாங்கியது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக நாட்கள் செல்ல செல்ல காங்கிரஸுக்கு கொடுக்கப்படும் சீட்களின் அளவும் குறைந்தது. கடந்த இரண்டு தேர்தல்களில் 60, 40 என சீட்களை பெற்ற காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெறும் 25 சீட்களையே வாங்கியிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸுக்குள் நீண்ட காலமாக இருக்கும் உள்கட்சி பூசல், கும்பல் போக்கு மனப்பான்மை என கட்சிக்குள் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன. இதனால் களத்தில் நிற்கும் கதர்காரர்கள் சோர்ந்து போய்விட்டனர். அதுமட்டுமின்றி தேசிய அளவில் காங்கிரஸ் அடைந்த தொடர் தோல்விகள் தமிழ்நாட்டிலும் பிரதிபலிக்க தொடங்கிவிட்டது. இள ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்ற நோக்கத்தில் தலைமைக்கு வந்த ராகுல் காந்தி சிறிது காலத்திலேயே அதிலிருந்து விலகியது ,சோர்ந்து போயிருந்த கட்சியினரை மேலும் சோர்வடைய செய்தது.
இந்தத் தேர்தலில் குறைந்த சீட்களை வாங்கியது குறித்து கருத்து தெரிவித்த, கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம், “குறைந்த இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கியதில் திமுகவை குற்றம் சொல்லி பலனில்லை” என்றார்.
அதுவும் ஒருவகையில் உண்மைதான், 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 63 இடங்களை பெற்று 5 இடங்களையும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் 43 சீட்டுகளை வாங்கி 8 இடங்களையும் வென்றால் எந்தக் கட்சியும் இடங்களை அள்ளி கொடுக்காது, கிள்ளிதான் கொடுக்கும் என்பதற்கு சிதம்பரத்தின் பேச்சு ஒரு சான்று.
இனிவரும் காலங்களில் காங்கிரஸின் கை தமிழ்நாட்டில் உயர வேண்டுமெனில் அடிமட்ட தொண்டனுக்கு புது ரத்தத்தை செலுத்தவும், தலைமையில் இருப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் குழு ரத்தத்தையும் அகற்றுவது அவசியமாகிறது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... கடந்த காலங்களில் நடந்தது என்ன?