சென்னை: புதுச்சேரியில் மின்சார துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். இதுதொடர்பான புகாரில் புதுச்சேரி கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு தபெதிக மாநில தலைவர் லோகு ஐயப்பன் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போஸ்டரில் உள்ள கருத்துக்கள் அவதூறானது கிடையாது, மின் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தே போஸ்டர் ஒட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, அவதூறு கருத்துக்களோடு போஸ்டர் ஒட்ட மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் நிபந்தனை முன்ஜாமீன் அளிப்பதாக தெரிவித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்று புதுச்சேரி காவல்துறைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.