சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்கட்சிகளின் ஒப்புதலுடன் நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, எதிர்கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு குழு அமைத்து ஆக்சிஜன் தயாரிக்கும் நிபுணர்களை பயன்படுத்த வேண்டும், தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்குப் போக எஞ்சியவற்றை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் என்ற தெரிவித்துள்ளன
இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி கூறுகையில், " ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம். தாமிரம் உள்ளிட்ட வேறு எந்தவித தயாரிப்புக்கும் ஆலையை நடத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்சிஜன் தயாரிப்பதற்கான மின்சாரத்தை தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும். இதுவும் தற்காலிகமாக இருக்க வேண்டும். தேவை முடிந்த பிறகு இங்கு தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கக்கூடாது.
ஆக்சிஜனைப் பெறக்கூடிய அனுமதியை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு, ஆலையை மீண்டும் திறக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்க கூடாது. இவற்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், போராட்டக் குழுவினர், பொதுமக்கள் அடங்கிய குழு அமைத்து அவர்களுடைய நேரடி கண்காணிப்பில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் உயிர் காக்கும் மனிதநேய அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவு தருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தவிர்த்து மற்ற தயாரிப்புகளை தயாரிக்கக் கூடாது. அங்கு நடைபெறும் தயாரிப்புகளை தமிழ்நாடு அரசின் சார்பில் குழு நியமிக்க்பபட்டு கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "*வேதாந்தா நிறுவனம் உள்நோக்கத்தோடு மீண்டும் உற்பத்தியை தொடங்கி விடலாம் என்ற எண்ணத்தோடு மனு தாக்கல் செய்துள்ளது. மாற்று வழி மூலம் அதன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கலாம். ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலும் எனும் நிலை இருந்தால், அதனை அரசு கையகப்படுத்தி ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அமைக்கப்பட கூடிய கண்காணிப்பு குழு மூலம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மூலம் அளிக்கக்கூடிய மின்சாரத்தின் மூலமாக இத்தகைய உற்பத்தி நடத்தப்பட வேண்டும். அங்கு தயாரிக்கும் ஆக்சிஜனை பயன்படுத்த தமிழ்நாட்டிற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். வேறு எந்த உற்பத்திக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையில் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.