ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்தும், அதனை கண்காணிக்கக் குழு அமைத்தது குறித்தும் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தை தெரிவித்ததன் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன் தொழிற்சாலை குறித்த தொழில்நுட்ப அறிவு சார்ந்த அரசு அலுவலர் என 7 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்தத் தொழிற்சாலை மருத்துவ தேவைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் இதனை இயக்கப்படக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளவும், ஆலையின் நிலை தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் கண்காணிப்பு குழுவுக்கு அதிகாரம் இருப்பதாகவும், மேலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆய்வறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.