கரோனா தொற்றுக்கான மருந்துக்கு கரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், பதஞ்சலி நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
கரோனில் என்ற பெயரில் இயந்திரங்களை தூய்மைப்படுத்தும் ரசாயன கலவையை தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை சார்பில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு, இயந்திரங்களை தூய்மைப்படுத்தும் ரசாயன கலவையை தயாரிக்கும் நிறுவனம், கரோனில் என்ற பெயரை பதிவு செய்யவில்லை.
கரோனில் பெயருடன் சேர்த்து, 92 பி, 213 எஸ்.பி.எல். என எண்கள், ஆங்கில எழுத்துக்களை சேர்த்து பதிவு செய்துள்ளதால், கரோனில் என்ற வார்த்தைக்கு ஏகபோக உரிமை கோர முடியாது. எனவே கரோனில் பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” எனத் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: 'கரோனில்' பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு அனுமதி!