முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதன்மூலம் பெற்ற 7.73 கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமானவரித் துறை 2018 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல்செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக கடந்த 21ஆம் தேதி (ஜன 21) நேரில் முன்னிலையாக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கவும் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு சென்நை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் முன் கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டு பதிவுக்கு 27ஆம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். சுந்தர் முன் நேற்று (ஜன 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் கே.டி. துளசி, வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது வேறு ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்ற வேண்டும். ஆனால் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது. அவ்வாறு மாற்றியது சட்டவிதிகளுக்கு எதிரானது என வாதிட்டார்.
இதேபோல் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அமீத் தேசாய், குற்றச்சாட்டு கூறப்படும் 2015- 2016ஆம் ஆண்டிற்கான வருமானவரி தொடர்பான மதிப்பீடு, மறு மதிப்பீடு பணிகள் அனைத்தையும் முடித்த பிறகு வருமானவரித் துறை இந்த வழக்கைப் பதிவுசெய்தது தவறு எனவும் மறு மதிப்பீடு பணிகளை முடித்த பிறகு மீண்டும் வரி செலுத்தியதை மறுஆய்வு (reopen) செய்வது தவறு எனவே வருமானவரித் துறை உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை குற்றச்சாட்டு பதிவுசெய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒரே பகுதியில் இருவேறு விபத்துகள்: மூவர் உயிரிழப்பு