சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாடு மாணவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமிழ்நாட்டில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்றுவருகின்றனர் (கரோனா தாக்கம் காரணமாக). ஒரு சில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன.
அவர்கள் தற்போது வெளிநாடுகளிலிருந்து பயின்றுவருகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் குறிப்பாக சீனா, இதுவரை இந்தியர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவருகிறது. இதனால் அங்கு மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில் தொடர்ந்து இணையவழி கல்வியையே தொடர்கின்றனர்.
இணையவழி வகுப்புகள்
இந்நிலையில், கடந்த டிசம்பர் 2020இல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் `தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 4.5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பை 75 விழுக்காடு வருகையுடன் (attendance) முடித்திருக்க வேண்டும்' என்றும், `இணையவழி வகுப்புகள் கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது' என்றும் ஒரு தீர்மானத்தை (TNMC/P.N 11/2020) நிறைவேற்றியது.
இத்தகைய மாணவர்களின் கடவுச்சீட்டு (Passport) சரிபார்க்கப்பட்டு, அவர்களது ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்புக் காலத்தில் 4.5 ஆண்டுகள் அவர்கள் பயிலும் நாட்டில்தான் தங்கியிருந்தனர் என்பதும் உறுதிசெய்யப்படும் என்று கூறியிருப்பது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விதிகளின்படி தற்போது வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த பின்னர் தமிழ்நாட்டில் மருத்துவம் பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அவர்களது படிப்பு இங்கு செல்லாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐந்து ஆண்டுகள் படிப்பில் ஏற்கனவே 1.5 ஆண்டுகள் இணையவழிக் கல்வியில் கழிந்துவிட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
வெளிமாநிலங்களுக்குச் சென்று பயிற்சி
நமது தமிழ்நாடு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பயில தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அனுமதிக்கும்போது, அசாதாரண சூழலால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத தமிழ்நாடு மாணவர்களின் இணைய வகுப்புகளையும் அனுமதிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். இதனை அரசு கருத்தில்கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.
மேலும், 2020இல் வெளிநாட்டுக் கல்லூரிகளில் படித்து முடித்த நம் தமிழ்நாட்டு மாணவர்கள், FMGE (Foreign Medical Graduate Examination) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் பயிற்சி எடுக்க முடியாமல் வெளிமாநிலங்களுக்குச் சென்று பயிற்சி (Internship) எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அப்படியே அனுமதி கிடைத்தாலும் தமிழ்நாட்டில் பயிற்சி பெற லட்சங்களில் செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழ்நாட்டில் விதிக்கப்படும் பயிற்சிக் கட்டணம் சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், பயிற்சி (Internship) பெற தேவையான NOC, தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் (Provisional Registration Certificate) போன்ற அனுமதிகளைப் பெறும் நடைமுறைகளுக்கு சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது என்றும் வருந்துகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளைக் களைய தமிழ்நாட்டில் பயிற்சிக் கட்டணம் குறைக்கப்பட்டு, பயிற்சி அனுமதிக்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு, கால விரயம் ஆகாமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விரைவில் பயிற்சிக்கான அனுமதி கிடைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கரோனா போன்ற அசாதாரண சூழலில் நம் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிடக் கூடாது. தற்போது பயிலும் மாணவர்களின் இணையவழிக் கல்வியை அனுமதித்தும், படித்து முடித்த மாணவர்களின் பயிற்சிக்கு வழிவகுத்தும், தமிழ்நாடு அரசு நல்ல முடிவினை மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் - தமிழ்நாடு அரசு