சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், ஆகம விதிகளின்படி தொன்மை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டு வாரம் இரண்டு நாட்கள் மாவட்ட வல்லுநர்கள் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 திருக்கோயில்களுக்குத் திருப்பணி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டம், நங்கைமொழி, அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் அருள்மிகு காட்டுநாச்சியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், பேராளம், அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், அருள்மிகு கோபிநாதப்பெருமாள் திருக்கோயில், ஆவினங்குடி அருள்மிகு விஸ்லநாத சுவாமி திருக்கோயில் உட்பட 59 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் நடத்துவது தொடர்பாக மாவட்ட வல்லுநர் கூட்டம் சென்னை இந்து சமய அறநிலை அலுவலகத்தில் நேற்று (மார்ச்.8) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருக்கோயில் தோன்றிய விவரம், சிலைகளின் தோற்றம், கட்டடங்களின் தரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவில் திருக்கோயில்களுக்குத் திருப்பணி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது, திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படும். இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் அர.சுதர்சன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கே.சந்திரசேகர் பட்டர் (ராஜா), கோவிந்தராஜ பட்டர், உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு