சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கிய இரண்டு நிறுவனங்களுக்கு 2015ஆம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடர்பான டெண்டர்கள் விடப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டு, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், அது தனியார் தகவல் என்பதால் தரமுடியாது என சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு தகவல் ஆணையர் விரைவில் தகவலை தரவேண்டும் என சாலைகள் துறை மாநகராட்சி அலுவலர் விக்டர் ஞானராஜிற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, விக்டர் மீண்டும் தகவலை தர மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 சட்டப்பிரிவு 20(1)ன் கீழ் தண்டத்தொகையான 25ஆயிரம் ரூபாயை விக்டர் ஞானராஜ் தனது சொந்த சம்பளத்திலிருந்து செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் மூன்று மாதத்திற்குள் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அவருடன் பணியாற்றிய விஜயகுமார் தனது கடமையை செய்ய தவறியதாகக் கூறி, அவர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நடிகர் சூர்யா குடும்பத்து திரைப்படங்களை திரையிட விருப்பமில்லை'