தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னையில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிரத்து 50க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர்.
தற்போது 300 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதற்காக அவரையும், அவருடன் தொண்டாற்றிவரும் சித்த மருத்துவப் பணியாளர்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்.
பல மாவட்டங்களிலும் கரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அல்லோபதி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதோடு, சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மாவட்டத்திற்கு ஒன்றாக சித்த மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, சிகிச்சையளிக்க முன் வருமாறு மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்..