சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சில இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு நான்கு லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், 'மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு இரண்டு லட்சம் கோவாக்சின், இரண்டு லட்சம் கோவிஷீல்டு முறையே நான்கு லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. அவை மாவட்ட வாரியாகத் தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். தடுப்பூசி உயிர் காக்கும், தடுப்பூசி செலுத்துங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.