பி.இ.,பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் 28ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர மொத்தம் காலியாகவுள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டின்கீழ், விளையாட்டு வீரர்கள் ஆயிரத்து 409 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 855 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். சிறப்புப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
www.tneaonline.org என்ற இணையதளத்தில் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்குள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி மாணவர்கள் 5 ஆயிரமும், எஸ்சி, எஸ்சிஏ,எஸ்டி மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவினை அக்டோபர் 3ஆம் தேதி முதல் நான்காம் தேதி மாலை 6 மணிக்குள் இணையதளத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான உத்தேச ஒதுக்கீடு அக்டோபர் 5ஆம் தேதி 7 மணிக்கு அறிவிக்கப்படும். அக்டோபர் ஆறாம் தேதி மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப் பிரிவு ஒதுக்கப்பட்டது என்பதற்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் அவர்களுக்குரிய தரவரிசைப் பட்டியல் எண் வரும்போது கலந்து கொள்ளலாம். பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும் சுற்றுகளின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கப்பலில் வேலை, எங்களுக்கு அமைச்சரை தெரியும் - ஏமாற்றமடைந்த பட்டதாரிகள்!