சென்னை: வீடு குத்தகை, கட்டுமான ஒப்பந்தம், தானம் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு முத்திரைத்தாள் பயன்படுகிறது. பொதுவாக வீடு குத்தகை உள்ளிட்டவற்றுக்கு ரூ.20, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 17) வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவது குறித்த சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், "கடந்த 2001ம் ஆண்டு முதல் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. இதனால் நீதித்துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு, பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாள் கட்டணம் ரூ.1,000 ஆகவும், ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாள், ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டவுடன், புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது. முத்திரைத்தாள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.