தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதை சபாநாயகர் தனபால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கியுள்ளார். விவாதங்கள் பின்வருமாறு:
ஸ்டாலின்: ரூ.92,948 கோடிக்கான அறிவிப்புகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு என அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான நிதி எங்கிருந்து வரும்?
எடப்பாடி பழனிசாமி: இந்த அறிவிப்பில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் என எதுவும் இல்லை; அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்டாலின்: இரண்டாவது முறையாக ஆட்சியில் நீடித்தும் ஏன் நிதி நிலையை சரிசெய்ய முடியவில்லை?
ஓ. பன்னீர்செல்வம்: மத்திய அரசால் வழங்கப்பட்டுவரும் நிதிக்குறைவே தற்போதைய நிதிப் பற்றாக்குறைக்கு காரணம். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய தொகுப்பிலிருந்து குறைந்துவருகிறது. மேலும் மத்திய அரசின் பங்கை குறைத்து அதிகபட்சமாக மாநில அரசின் தொகையில் சேர்த்துவிட்டனர். இதனால் ரூ. 3500 கோடி நிதிச்சுமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
(அப்போது, இடையில் திமுகவினர் கூச்சலிட்டனர்)
தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நீடித்தது.
அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் தனபால்: அதனை (ஓபிஎஸ் பேசியதை) அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறேன்.
ஸ்டாலின்: மிட்டாய்க்காக நாங்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுகவினர் கூறுவது மக்களை கொச்சைப்படுத்துவதாகும். அதுவும் முதலமைச்சரே கூறுவது நல்லதல்ல?
பழனிசாமி: வாக்குறுதிகளைத்தான் மிட்டாய் போன்று கொடுத்து ஏமாற்றினீர்கள் என்றும், உங்கள் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதது என்பதைத்தான் சொன்னோம்.
ஸ்டாலின்: 22 தொகுதிகளில் ஒன்பது இடங்களில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். நிச்சயமாக ஒரு மாற்றம் வரும்; அப்போது நாங்கள் ஆட்சி அமைத்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மேலும் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.