சென்னை: எம்பிபிஎஸ்(MBBS) மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (NExT) தேர்வு நடத்தப்படவுள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், (NExT) தேர்வை அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், (NExT) தேர்வை கைவிட வேண்டும். தற்போதுள்ள முறையே தொடர வேண்டும். மேலும் நமது மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக கல்விச்சுமை மற்றும் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டு இந்த தேர்வை கண்டிப்பாக்க தவிர்க்கப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Governor: பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த தேதி அறிவிப்பு - ஆளுநர் மாளிகை தகவல்
நேற்று, சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவிந்திரநாத் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். நெக்ஸ்ட் தேர்வு பற்றி அவர் கூறியதாவது, "மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள 100 சதவிதம் இளநிலை மருத்துவ கல்வி இடங்களுக்கு மத்திய அரசே மருத்துவ கல்வி கலந்தாய்வு குழு மூலம் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த முயல்கிறது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மேலும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்" என கூறியிருந்தார்.
ஏற்கனவே மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது நெக்ஸ்ட் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவர் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு முறைக்கு எதிர்ப்பு: டாக்டர்கள் சங்கம் கூறும் காரணம் என்ன?