மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் என்னென்ன? இரண்டுக்கும் பொதுவானவை என்னென்ன? என்று தெளிவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. ஆயினும் மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொள்ள மாறி மாறி வரும் மத்திய அரசுகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
உதாரணமாக, எமர்ஜென்சி காலகட்டத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் விளைவு நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனை தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் கடுமையாக எதிர்த்தனர்.
தற்போது மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள பழமைவாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறுஆய்வு செய்யப்போவதாகவும் கூறப்பட்டது.
சமீபத்தில், தமிழ்நாடு தொல்லியல் துறையால் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியை மூன்றாம் கட்டத்துடன் மத்திய அரசு நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மாநில அரசு அடுத்த கட்ட அகழாய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.
கலாசாரத் துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, பழமைவாய்ந்த கோயில்களின் வளர்ச்சிக்காக, இந்து அறநிலையத் துறைக்கு தனி அமைச்சகம் அமைத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கட்சியான திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமகவும் மத்திய அரசின் இந்த அறிவிப்பை கடுமையாகச் சாடியுள்ளது.
”தமிழ்நாட்டின் கலை, கலாசார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக்கொள்ள ’பரம்பரை எதிரிகள்’ துடிக்கிறார்கள்” என்று தலைப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
- பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழ்நாட்டில் “தொல்லியல் துறை” ஒன்று செயல்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது.
- மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து - வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும்.
- தமிழ்நாட்டின் தனித்துவமிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோயில்களை எல்லாம் மாநில அரசிடமிருந்து பறித்துக் கொண்டு, தமிழ் நாட்டிற்கே உரிய கலாசாரத்தையும் பண்பாட்டையும் சிதைக்கத் துணிவது மன்னிக்க முடியாத துரோகம்.
- ஆகவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும்.
- தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மீறியும் மாநிலத்தின் உரிமையை நசுக்கும் விதமாகவும் செயல்படும் மத்திய அரசை எதிர்த்து தமிழ் மக்களைத் திரட்டி திமுக மாபெரும் போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
”நாத்திக - ஆத்திகப் பிரச்சினையல்ல - மாநிலங்களின் உரிமைப் பிரச்னை”
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- ’ஒட்டகம் கூடாரத்திற்குள் மெதுவாக நுழைவதுபோல்’, தொல் பொருள் துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழ்நாட்டுக் கோயில்களை மத்திய அரசே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
- இது மிகவும் ஆபத்தான, மாநில உரிமையைப் பறிக்கும் விபரீத யோசனையாகும்.
- தஞ்சை பெரிய கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் நிலை வெகுவிரைவில் வருமென்பதால், இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசரக் கடமையாகும்.
- இது ஆத்திகர் - நாத்திகர் உரிமைப் பிரச்சினை அல்ல. மாநிலங்களின் உரிமைப் பிரச்னை என்பதால் பேராபத்துகள் நிகழும் முன் தடுத்துநிறுத்த வேண்டும். வருமுன்னர் தடுப்பதே புத்திசாலித்தனம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படுவது, கோயில்களுக்குப் பூட்டு போடுவதுக்குச் சமம்”
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய பெருமைமிக்க கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையால், ஒப்பீட்டளவில் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகையச் சூழலில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை என்ன காரணத்திற்காக மத்திய தொல்லியல் துறையிடம் தாரை வார்க்க மத்திய அரசு துடிக்கிறது என்று தெரியவில்லை.
- தமிழ்நாட்டு கோயில்கள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் கலாசார படையெடுப்பை அனுமதிக்க முடியாது.
- வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பதென்பது அக்கோயிலை மூடுவதற்கு ஒப்பானதாகும்.
- மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால் கோயில்களின் புனிதம் கெட்டு, அவை சாதாரண கட்டடங்களாகி விடும்.
- இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆகியவற்றை விட மத்திய தொல்லியல் துறையால் தமிழ்நாட்டு ஆலயங்களைச் சிறப்பாகப் பராமரிக்க முடியாது.
- தமிழ்நாட்டு கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றால் அதை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.