மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை கொருக்குப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஒன்றும் நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டிவருகிறார்.
துண்டுச்சீட்டு இல்லாமல் வரத் தயாரா?
நீங்கள் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள், சட்டப்பேரவையில் எவ்வளவு ஆட்டம் போட்டார்கள் என்று. அவர்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் நாடு தாங்குமா, ஆனால் நான் கேட்கிறேன் இதே மேடையில் துண்டுச்சீட்டு இல்லாமல் என்னுடன் அவர் விவாதிக்கத் தயாரா? முடியாது, ஏன் என்றால் துண்டுச்சீட்டையும் சரியாகப் படிக்க மாட்டார். அவரெல்லாம் அதிமுக பற்றி குறை கூறுகிறார்.
கரோனா பரவல் தொற்று நாடு முழுவதும் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டது. சென்னையில் பல்வேறு மேம்பாலங்களை அதிமுக அரசு கட்டி முடித்துள்ளது. இவ்வளவு செய்தும் ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்.
ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம்!
திமுகவினர் பிரியாணி கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் அடிதடிதான், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம் என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்.
தமிழ்நாட்டில் ஜாதிச் சண்டை, மதச்சண்டை கிடையாது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது” என்றார்.