சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவின் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்த நிலையில், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக சிறுமி டானியா கூறியுள்ளார். முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிறுமி டானியாவிற்கு வாய் திறக்க கடினமாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சிறுமி டானியா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க நிகழ்ச்சி பட்டாபிராமில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதலமைச்சர் நிகழ்வை முடித்து கொண்டு, மோரையில் உள்ள சிறுமி டானியா வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சர் வருகையால் சிறுமி டானியா மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து சிறுமி டானியாவிடம் 'அறுவை சிகிச்சைக்குப் பின்னர், நலமுடன் மகிழ்ச்சியாக உள்ளதா?' எனவும்; 'படிக்கிறீர்களா?' எனவும் கேட்டு முதலமைச்சர் நலம் விசாரித்தார்.
அதற்கு சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் படிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். திடீரென முதலமைச்சரே எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்து சிறுமியை விசாரித்ததால் பெற்றோர்கள் மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். முதலமைச்சருடன் அமைச்சர் நாசர், அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கனவே சிறுமியை மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமி டானியாவின் தாய் பேசுகையில், 'முதலமைச்சர் ஐயா வீட்டிற்கு நேரில் வந்தது எதிர்பாராதது. மிகவும் சந்தோஷமாக உள்ளது' எனத் தெரிவித்தார். ’தனது மகள் முன்னர் இருந்த நிலையில் இருந்து மேம்பட்டு இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ எனக் கூறினார். தற்போது கோயில், கடைவீதி, கடற்கரை என அனைத்து இடத்திற்கும் செல்வதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு