தமிழ்நாடு ஆவலோடு எதிர்பார்த்திருந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கிறது திமுக. தமிழக முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்க இருக்கிறார். கோட்டைக்குள் முதலமைச்சராக நுழைய இருக்கும் ஸ்டாலின் இந்த இடத்தை எப்படி அடைந்தார். அவர் கடந்து வந்த பாதை என்ன?
வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் என படிப்படியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்து தற்போது முதன்முதலாக திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வென்றிருக்கிறார்..
தனது இளமை பருவத்திலேயே நண்பர்களை இணைத்து கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்டாலின்.
கடந்த 1973ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1976ஆம் ஆண்டு நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி காலத்தில், ஸ்டாலின் சிறை சென்றபோது அவருக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகியிருந்தன.
ஒரு வருடம் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்து கட்சி பணிகளில் கவனம் செலுத்திய ஸ்டாலின், 1984ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், தோல்வி அடைந்தார்.
1989, 1996, 2001, 2006ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவியும், துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஸ்டாலின். மாநகராட்சி உறுப்பினர்கள் மேயரை தேர்ந்தெடுத்து வந்த நிலையில், முதல் முறையாக மக்களின் நேரடி வாக்குகளைப் பெற்று மேயர் ஆனார். அவர் மேயராக இருந்தபோது சென்னை வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஸ்டாலின் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத்திருத்தம் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு, மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு 2011, 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் தற்போது நடந்த தேர்தலிலும் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.