சென்னை: சென்னையில் இரண்டு நாட்களாகத்தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை ரிப்பன் மாளிகைக்கூட்ட அரங்கில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்டப்பல்வேறு துறை அலுவலர்களும் மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பு ஐஏஎஸ் அலுவலர்களும் பங்கேற்றனர்.
ஆய்வுகூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, "சென்னையில் இரண்டு நாட்களில் சராசரியாக 20.55 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு கூடுதலாக மழைப்பதிவாகியுள்ளது.
புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டும்தான் மழை நீர் தேங்கி உள்ளது. திரு.வி.க நகர் பகுதியில் 35 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. அளவுக்கு அதிகமாக மழைப்பெய்த காரணத்தால் இந்தப்பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இருந்தும் மழை நீர் தொடர்ந்து வடிந்து வருகிறது.
சென்னையில் மழை நீரை வெளியேற்ற மொத்தமாக 536 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளன. 3 சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. அந்த சுரங்கப்பாதைகளில் ரயில்வே துறையின் அனுமதி கேட்டு விரைந்து மழை நீர் வெளியேற்றப்படும்.
மேலும் 169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளன. மழை நீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்படும்.
அதோடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 வார்டுகளிலும் வரும் நவம்பர் 5ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும். வாய்ப்பு இருப்பின் முதலமைச்சர் மருத்துவ முகாம்களைத்தொடங்கி வைப்பார். சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தற்போதைக்கு கூடுதலாக ஐஏஎஸ் அலுவலர்களை பணியமர்த்த தேவையில்லை" என்று கூறினார்.
இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று நீர் திறப்பு...!